22 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு - 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தப்போவ மற்றும் நாச்சதூவ போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் மீ ஓயா மற்றும் கலா ஓயா பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் கடும் மழை காரணமாக களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன், பல மாவட்டங்களில் சிறு வெள்ள அபாயமும் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 22 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தப்போவ மற்றும் நாச்சதூவ போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதால் மீ ஓயா மற்றும் கலா ஓயா பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பில் 15-05-2026அன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூர்யபண்டார தெரிவிக்கையில், மேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனைச் சார்ந்த ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் அதிக மழை பெய்துள்ளது. களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகிய பகுதிகளில் கணிசமான மழை பதிவாகியுள்ளது. களு கங்கையின் மில்லகந்த பகுதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக குடா கங்கை பகுதியில் நேற்று காலை சிறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதால், புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள தாழ்நில மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஏற்கனவே பல இடங்களில் நீர் புகுந்துள்ள நிலையில், தற்போது பெய்யும் மேலதிக மழையினால் ஆபத்து அதிகரிக்கலாம்.





