மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அவதானநிலை: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
தித்வா புயல் தாக்கத்தின்போது மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அவதானநிலை காணப்படுகிறது.
தித்வா புயல் தாக்கத்தின்போது மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அவதானநிலை காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு கண்டி,கேகாலை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்துக்கு இரண்டாம் கட்ட செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட பொறியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் காரியாலயத்தில் 03-08-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: நாட்டில் நிலவும் சீரற்ற மழையுடனான காலநிலையால் மத்திய மலைநாட்டு பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது. இதற்கமைய கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பதிவாகிய மழை வீழ்ச்சிக்கு அமைவாகவே மண்சரிவு அபாயம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் பதிவாகும் மழை வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவித்தல்கள் மாற்றமடையலாம்.
ஒருசில பகுதிகளில் பிரதான வீதிகளில் மண்மேடு சரிந்து விழுந்ததால் வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கண்டி – நாவலப்பிட்டி பிரதான வீதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடை மீது மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.பெரும்பாலான பகுதிகளில் மண்மேடு சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தித்வா புயல் தாக்கத்தின்போது மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அவதானநிலை காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.





