22 திருத்தத்துக்கு ஆதரவாக லக்ஷ்மன் நிபுண ஆராய்ச்சி எம்.பி மனு
குறித்த திருத்த சட்டத்தின் சட்டத் தன்மையைச் சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே லக்ஷ்மன் நிபுணஆராச்சியின் இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்வைத்துள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராய்ச்சி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதற்கமைய, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த திருத்தச் சட்டத்தின் எந்தவொரு வாசகமும் மக்களின் இறையாண்மைக்கோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்திற்கோ எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என அந்த மனுவின் ஊடாக வலுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றின் ஊடாக மக்களின் சிறப்பு அனுமதி எதுவும் தேவையில்லை எனவும், மாறாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண பாராளுமன்றச் செயற்பாட்டு முறைமையைப் பின்பற்றியே அதனை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், குறித்த திருத்த சட்டத்தின் சட்டத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி ஏற்கனவே 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள பின்னணியிலேயே லக்ஷ்மன் நிபுணஆராச்சியின் இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அரசாங்கம், சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும், மக்கள் கருத்துக்கணிப்பு அவசியமா என்பது குறித்தும் நீதிமன்றம் வழங்கும் எந்தவொரு தீர்ப்புக்கும் அல்லது கட்டளைக்கு முழுமையாகத் தலைவணங்கி அதற்கமையவே செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





