மெட்டா நிறுவனத்துடன் விசேட கலந்துரையாடல்
சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருங்கிணைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டது.
சமூக ஊடகத் தளங்களில் டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக, மெட்டா நிறுவன பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் 19-03-2026 அன்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துதல் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, டிஜிட்டல் உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் மேற்படி சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் திட்டத்துக்கு அமைவாக மெட்டா நிறுவனம் தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருங்கிணைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டது.
இந்த சந்திப்பில் அரசாங்கத் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார, மெட்டா நிறுவனத்தின் மத்திய ஆசியா, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பொதுக் கொள்கைத் தலைவர் செனுர அபேவர்தன, தெற்காசியாவுக்கான பொதுக் கொள்கை உதவி மேலாளர் டெஹாரா புஞ்சிஹேவா, ஆசிய பசிபிக் பாதுகாப்பு கொள்கைத் தலைவர் பிரியங்கா பல்லா மற்றும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் தேசியக் குழுவின் உறுப்பினர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்ரம உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.





