ரணிலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
முதல் சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
சுமார் 16.6மில்லின் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியை தவறாக பயன்படுத்தி, பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட விஜயம் முன்னெடுத்தது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போதுமான சான்றுகள் உள்ளதாகவும் அவருக்கு எதிராக உடனடியாக மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோட்டை நீதிவான் நீதிவான் இசுரு நெத்திகுமார சட்ட மா அதிபருக்கு அறிவித்தார்.
பிரித்தனைய பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சொமிசார பண்டார ஏக்நாயக்க ஆகியோர் மீதான வழக்கு 29-04-2026 அன்று கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முதல் சந்தேக நபரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவருக்காக சட்டத்தரணிகள் மருத்துவ அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததோடு, சந்தேக நபர் உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் என்றும் தெரிவித்தனர்.
எனினும் 2 ஆம் சந்தேக நபரான சொமிசார பண்டார ஏக்நாயக்க நீதிமன்றில் ஆஜரானார். சி.ஐ.டி.யினர் சார்பில் பிரதான விசாரணை அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நலிந்த ஹேரத், உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க ஆகியோர் மேலதிக விசாரணை அரிக்கையுடன் மன்றில் ஆஜரானதுடன், அவர்களுக்காக சிரேஷ்ட அரச சட்டவாதி சமதரி பியசேனவுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் ஆஜரானார்.
முதல் சந்தேக நபர் ரணிலுக்காக ஜனாதிபதி சட்டத்தரனிகளான அனுஜ பிரேமரத்ன, ஜயந்த வீரசிங்க ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன ஆஜரானார். 2 ஆம் சந்தேக நபர் சொமிசார பண்டார ஏக்நாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்த்ரதிஸ்ஸ ஆஜரானார்.





