2029 இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம் - இத்தேகந்தே சதாதீஸ்ஸ தேரர்
கடந்த மக்கள் போராட்டம் என்பது வெளிநாட்டு உளவுத்துறைகள், மதப் பரப்பாளர்கள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புலம் பெயர் அமைப்புகளின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற அரகலய மக்கள் போராட்டமானது வெளிநாட்டு உளவுத்துறைகள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புலம் பெயர் அமைப்புகளின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது. 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை நிச்சயமாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக்குவோம் என ராவணா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்தே சதாதீஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
கொழும்பு, ஜா-எல பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தாய்நாட்டைப் பாதுகாத்த தலைவர்களைப் சிறைச்சாலையைக் காட்டி பயமுறுத்த முடியாது. தற்போதைய அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்து வருகிறது. வரவிருக்கும் எந்தவொரு தேர்தலிலும் உயிரைக் கொடுத்தாவது உழைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை எந்த இடத்தில் விட்டுச் சென்றாரோ, அங்கிருந்து நவீன தொழில்நுட்பத்துடன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவரான நாமல் ராஜபக்ஷவை பலப்படுத்த வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கட்சி கடுமையான சவால்களை எதிர்கொண்டிருந்த தருணத்தில், வழிபாடுகளை முடித்துவிட்டு வந்த நாமல் ராஜபக்ஷவிடம் வேட்பாளர் வரவில்லை என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது கட்சியின் அழிவைத் தடுத்து, கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் துணிச்சலான தீர்மானத்தை எடுத்தார். அந்தத் தீர்மானம் இன்று பலன் கொடுத்து வருகிறது. 2029 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்ஷவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம். அதற்குத் தேவையான சூழலை மகா சங்கத்தினரும், ஏனைய மதத் தலைவர்களும், நாட்டு மக்களும் இணைந்து உருவாக்கி வருகின்றனர்.
கடந்த மக்கள் போராட்டம் என்பது வெளிநாட்டு உளவுத்துறைகள், மதப் பரப்பாளர்கள் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் புலம் பெயர் அமைப்புகளின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்பச் செயல்பட்டு நாட்டைச் சீரழித்தவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆதரவளித்ததன் விளைவையே இன்று நாடு அனுபவிக்கிறது. அன்று சமூக வலைதளங்களில் கேலி செய்தவர்களே இன்று பொருளாதார நெருக்கடியால் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த காலத்தில் 350 ரூபாவுக்கு உர மூட்டையை வழங்கி விவசாயிகளைக் கௌரவித்த தலைவருக்கு எதிராகப் பொய்ப் பிரச்சாரங்களை நம்பிச் செயல்பட்டதன் பிரதிபலனையே இன்று விவசாயிகள் அனுபவிக்கின்றனர். எனவே, இந்த நாட்டை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய, எதிர்காலத்தைக் கட்டியெழுப்பக்கூடிய தலைவர் நாமல் ராஜபக்ஷ மட்டுமே என்பதை உணர்ந்து அனைவரும் அவருடன் இணைய வேண்டும் என்றார்.





