பாணந்துற நிலங்கவுக்கு எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலங்க சம்பத் சில்வா எனும் ‘பாணந்துற நிலங்கவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மேற்படி சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் போது மன்றில் முன்னிலையான விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர் தடுப்பு காவல் உத்தரவுக்கமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவரது தடுப்பு காவல் காலம் நிறைவடைந்துள்ளமையால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.





