ஹெய்ட்டிக்கு இலங்கை இராணுவத்தை அனுப்புவதை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்து
இவ்வமைப்புகள், தற்போது புதிய இராணுவப் பங்களிப்பை உள்வாங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவரும் சிரேஷ்ட அதிகாரிகள் குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கான நம்பகமான, சுயாதீனமான செயன்முறை எதுவும் இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள 14 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், எனவே இலங்கையினால் ஹெய்ட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சுமார் 900 இராணுவ வீரர்கள் மற்றும் 140 பொலிஸாரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என வலியுறுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, ஹெய்ட்டி அரசாங்கம் மற்றும் குண்டர் ஒழிப்புப் படை என்பவற்றுக்கு அனுப்பிவைத்துள்ள கூட்டறிக்கையில், கடந்தகால மீறல்கள் தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மதிப்பீடு என்பது பெரும்பாலும் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சுய சான்றளிப்பிலேயே தங்கியிருக்கிறது என்றும், அமெரிக்கத் தூதரகத்தினால் ஓரளவு முன்னேற்றகரமான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டப்படுள்ளது.
2004 - 2007 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அமைதிகாக்கும் படையினரால் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் சுரண்டல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளில் கண்டறியப்பட்ட ஹெய்ட்டியில் இலங்கையின் கடந்தகால பதிவுகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இவ்வமைப்புகள், தற்போது புதிய இராணுவப் பங்களிப்பை உள்வாங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுவரும் சிரேஷ்ட அதிகாரிகள் குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பங்களிப்புடனான ஒரு சுயாதீனமான மதிப்பீட்டு வழிமுறை நிறுவப்படும் வரை இந்த பணியை நிறுத்திவைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் குண்டர் ஒழிப்புப் படை என்பவற்றிடம் வலியுறுத்தியுள்ள அவ்வமைப்புக்கள், சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐக்கிய நாடுகள் உபகுழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.





