நாட்டில் இனவாதத்துக்கு மீண்டும் இடமில்லை: ஜனாதிபதி அநுரகுமார
கடந்த காலங்களில் இலங்கையர்கள் மோதிக்கொண்டார்கள், முரண்பட்டுக்கொண்டார்கள். ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு அவ்வாறான நிலை ஏற்படாது.
நாட்டில் இடம்பெற்ற இனவாத முரண்பாடுகளின் பின்னணியில் அரசியல் நோக்கங்களே காணப்பட்டன. வடக்கில் தமிழ் மக்களும் தெற்கில் சிங்கள மக்களும் தூண்டிவிடப்பட்டார்கள்.இறுதியில் இருதரப்பிலும் இழப்புக்கள் மாத்திரமே மிகுதியாகின. தற்போதும் தொல்பொருள் இடங்கள், மத தலங்களை முன்னிலைப்படுத்தி இனவாதம் தோற்றுவிக்கப்படுகிறது. நாட்டின் இனியொரும் போதும் இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறாது. தமிழ் மக்கள் என்மீது கொண்ட நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்பேன்.வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
மீசாலை – சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் 16-01-2026 அன்று நடைபெற்ற 'தமக்கான இடம் அழகிய வாழ்க்கை' இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியமர்த்தும் வீட்டுத் திட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, யுத்தத்தால் பெருமளவிலான வீடுகள் சேதமடைந்தன. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தவர்களும் முறையாக மீள்குடியமர்த்தப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் பெருமளவிலானோர் இன்றும் இடம்பெயர்ந்துள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் அரசாங்கங்கங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் காணப்பட்ட வேறுப்பாடு தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஊழல் மோசடி செய்து அரச நிதியை கொள்ளையடித்து மக்களை கவனிக்காமல் தம்மை மாத்திரம் கவனித்துக் கொண்டால் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் இடைவெளி ஏற்படுவதை தடுக்க முடியாது. கடந்த காலங்களில் அவ்வாறான தன்மையே காணப்பட்டது.
தமது குடும்பத்துக்கு மாத்திரம் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை தோற்கடித்து மக்கள் இம்முறை தமக்காகன அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள். சமூக கட்டமைப்பில் இன்றும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்குரிய நடவடிக்கைகளை மேம்படுத்துவோம்.
வடக்கு மாகாணத்தில் பிரதான ஜீவனோபாயமாக காணப்படும் விவசாயத்துறையை மேம்படுத்துவற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன இறுதியில் ஏதும் கிடைக்கவில்லை.இரு தரப்பிலும் இழப்புக்கள் மாத்திரமே மிகுதியாகின.
இனவாத முரண்பாடுகளின் பின்னணியில் அரசியல் நோக்கங்களே காணப்பட்டன. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தூண்டிவிடப்படுகிறார்கள். இன்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் மத தலங்களை முன்னிலைப்படுத்தி இனவாதத்தை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். இனி இந்த நாட்டில் வடக்கிலோ, தெற்கிலோ அல்லது ஏனைய மாகாணங்களிலோ இனவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது.
சகோதரத்துடன் வாழும் சூழலை உருவாக்குவதே எமது பிரதான இலக்கு. பலாலி விமான நிலையத்தை வெகுவிரைவில் அபிவிருத்தி செய்வோம்.அதேபோல் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளவுள்ளோம்.இந்த துறைமுக அபிவிருத்தி பணிக்கு 60 மில்லியன் டொலரை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையர்கள் மோதிக்கொண்டார்கள், முரண்பட்டுக்கொண்டார்கள். ஆனால் எதிர்கால தலைமுறையினருக்கு அவ்வாறான நிலை ஏற்படாது. அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து. வடக்கு மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்தார்கள். தமிழ்கள் என்மீது கொண்ட நம்பிக்கையை பாதுகாப்பேன். அவர்களை புறக்கணித்து ஒருபோதும் செயற்பட போவதில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்றார்.





