மாகாண சபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும்: சாணக்கியன் எம்.பி.
அந்த சிலையை பார்க்கும் போதேல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதனை வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. மீண்டும் புதிய குழு ஒன்றை அமைத்து தேர்தலை இழுத்தடிக்கவே முயற்சிக்கிறது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்த போது பல விடயங்களை நாங்கள் குறிப்பிட்டோம். தேர்தல் தொடர்பில் அவரின் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினோம். மாகாண சபைகள் தேர்தல் மற்றைய பிரதேச மக்களுக்கும் மற்றைய கட்சிகளுக்கும் முக்கியமானதா என எங்களுக்கு தெரியாது. ஆனால் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கும் எங்களுக்கும் இது முக்கியமானது. ஒரு வருடத்தில் மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படும் என்று வழங்கிய வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டே வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கினர். அந்த ஆணையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளது.
மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான எனது தனிப்பட்ட சட்டமூலம் தொடர்பாக அமைச்சரின் அறிக்கையொன்றை பெற்றுள்ளோம். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும் பொய்யானவையே. ஜனாதிபதியை நாங்கள் சந்தித்து மாகாண சபைகள் தொடர்பில் கூறியுள்ளோம். எதிர்க்கட்சிகள் நான் சமர்ப்பித்த சட்டமூலத்தை எடுத்துக்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன. முதுகெலும்பு இருக்குமாக இருந்தால் நீங்கள் அதனை செய்ய வேண்டும். மாகாண சபைத் தேர்தலை தாமதிப்பதற்கு காரணங்கள் இருக்குமாக இருந்தால் அதனை கூறுங்கள். அவ்வாறு இல்லாமல் சட்டத்தின் மீது சுமத்தி, வேறு குழுக்களை அமைத்து இதில் இருந்து நழுவிச் செல்ல முயற்சிக்க வேண்டாம்.
இந்த அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு பயப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு புத்தர் சிலை விவகாரத்துடன் இல்லாமல் போய்விட்டது. இது முடிந்த சம்பவம் என்றும் ஏன் அதுபற்றி கதைக்கின்றீர்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சிலை அந்த இடத்தில் இருக்கும் வரையில் இந்த சம்பவம் முடிந்த சம்பவம் அல்ல. உங்களின் நிகழ்ச்சி நிரலில் அந்த இடத்தில் சிலையை வைத்துள்ளமையினால் அது முடிந்த விடயமாக இருந்தாலும் எங்களை பொறுத்தவரையில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் இனவாதமான செயற்பாடு ஞாபகமூட்டும் விடயமாகவே இந்த சிலை அமையும். அந்த சிலையை பார்க்கும் போதேல்லாம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்பதனை வைத்தியர் அர்ச்சுனா கூறியுள்ளார். அதாவது வலது கையால் அன்றி இடது கையால் சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபை அமைச்சுக்கு எதிராக இலங்கை தமிழரசுக் கட்சி வாக்கெடுப்பை கோரும். வாக்கெடுப்பை கோருவதன் காரணத்தில் ஒன்று மாகாண சபைக்கு எதிரானது. மற்றையது ஒரு வருடமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை வைத்து தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கானது. அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலில் இன்று நடத்தினாலும், ஒரு வருடத்தின் பின்னர் நடத்தினாலும் தோல்வியடையும். மாகாண சபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வியடையும். என்றார்.





