டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம்
டெங்கு பரவும் காலங்களில் உடல்நலத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையான டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த நாளங்களின் உள்சுவர் செயலிழப்பு மற்றும் இரத்தத் தட்டணுக்களின் (Platelets) செயல்பாட்டுக் குறைபாடு ஆகிய காரணங்களால், டெங்கு இரத்தப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நோய்க்குறி போன்ற கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு பரவும் காலங்களில் உடல்நலத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். போதுமானளவு நீர் அருந்துதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் நோயின் தீவிரத்தை குறைக்க உதவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேகமான இதயத் துடிப்பு, கடுமையான வயிற்றுவலி உள்ளிட்ட எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு, உடல் பருமன், சிறுநீரக அல்லது இதய நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்துக்குள்ளாகும் பிரிவினராகக் கருதப்படுகின்றனர்.





