22 ஆவது திருத்த சட்டமூலம் -எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதிலிருந்து மனுதாரர்கள் விலகல்
ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆதரித்திருந்தனர். எனினும், அதனை நீதியரசர்கள் அமர்வு எவ்வித காரணங்களையும் தெரிவிக்காது நிராகரித்திருந்தது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின்போது, வாய்மொழி ரீதியாகப் பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படாமைக்கு எதிராக மனுதாரர்கள் மன்றில் தமது வாதங்களை முன்வைத்துள்ளனர்.
மனுக்கள் மீதான விசாரணைகளுக்கமைய, எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதிலிருந்து மனுதாரர்கள் விலகியுள்ளதோடு, இது தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கும் அறிவித்துள்ளனர்.
குறித்த நகர்த்தல் பத்திரத்தில் பிரதிவாதியாகச் சட்டமா அதிபரும், சட்டமா அதிபர் திணைக்களமும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
மனுதாரர்கள் மேற்படி மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு முழுமையான நீதியரசர்கள் அமர்வு நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தனர். அந்த அமர்வில் உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதியரசர்களும் இடம்பெற வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக இருந்தது.
பிரதம நீதியரசர் மற்றும் ஏனைய நீதியரசர்களுக்கிடையிலான நலன்முரண்பாடுகளை தவிர்க்க இது உதவும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர். வழக்கு விசாரணைக்காகக் குறிப்பிட்ட நீதியரசர்கள் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டையும் தவிர்ப்பதற்கு உதவும் என மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏனைய மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆதரித்திருந்தனர். எனினும், அதனை நீதியரசர்கள் அமர்வு எவ்வித காரணங்களையும் தெரிவிக்காது நிராகரித்திருந்தது.
இந்நிலையில் கடந்த முதலாம் திகதியன்று இரவு 10.30 மணி வரை மனு மீதான பரிசீலனைகள் இடம்பெற்றன. மீண்டும் செப்டம்பர் 2 ஆம் திகதி காலை 10 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது முதன்முதலில் மனுதாரர்கள் தரப்பிலேயே விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், மனுதாரர்களின் சமர்ப்பணங்களின் பின்னர்தான் விடயங்களை முன்வைப்பதாக அறிவித்திருந்தமையே இதற்குக் காரணமாகும்.
அதன்பின்னரே, சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் இடையீட்டு மனுதாரர்களுக்கு விடயங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் விடயங்களை முன்வைக்க வேண்டியிருந்ததால், நேரத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என நீதியரசர்கள் அமர்வு அறிவுறுத்தியிருந்தது.திருத்த சட்டமூலத்தை நியாயப்படுத்தி சொலிசிட்டர் ஜெனரல், இறுதியிலேயே தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.
மனுதாரர்களுக்கு குறித்த சட்டமூலத்திற்குரிய கொள்கை சார்ந்த எந்தவொரு ஆவணமும் வழங்கப்படாத பின்னணியிலேயே அவர் இந்த சமர்ப்பணங்களை மேற்கொண்டார். செப்டம்பர் இரண்டாம் திகதி மாலை 5.30 மணியளவில் சொலிசிட்டர் ஜெனரலின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்தன. அதன்பின்னர், மனுதாரர்களின் சட்டத்தரணிகள் வாய்மொழி மூலமாகப் பதிலளிப்பதற்கான உரிமையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். எனினும், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.





