அரசியலில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்
இக்கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேற்படி இரு மாகாணங்களிலும் பல்வேறு தடைகள் காரணமாக பெண்களின் அரசியல் பங்கேற்பு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அரசியலில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பை ஊக்குவிப்பதற்கு அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட செயற்திறன்மிக்க நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என பொதுவான களத்துக்கான தேடல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
'அரசியல் செயற்பாடுகளில் பெண்களின் அர்த்தமுள்ள பங்கேற்பு மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல்' தொடர்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் அனுசரணையுடன் 'பொதுவான களத்துக்கான தேடல்' எனும் அரச சார்பற்ற அமைப்பினால் கடந்த 2025 செப்டெம்பர் - 2026 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த பெண் அரசியல் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடல்கள், தலைமைத்துவப் பயிற்சி வழங்கல்கள் என்பன மேற்கொள்ளப்பட்டதுடன், அரசியலில் பெண்களின் பங்கேற்பு தொடர்பில் ஆய்வொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி ஊவா மாகாணத்தில் மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 10 கலந்துரையாடல்களில் 180 பேர் பங்கேற்றிருந்ததுடன், அவர்களில் 77 சதவீதமானோர் பெண்களாவர். அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட 10 கலந்துரையாடல்களில் 248 பேர் பங்கேற்றிருந்ததுடன், அவர்களில் 77.4 சதவீதமானோர் பெண்களாவர்.
இக்கலந்துரையாடல்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது மேற்படி இரு மாகாணங்களிலும் பல்வேறு தடைகள் காரணமாக பெண்களின் அரசியல் பங்கேற்பு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி ஆணாதிக்க சமூகக்கட்டமைப்பு (82 சதவீதமானோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது), ஊதியமற்ற அதிக வேலைப்பளு (70), குடும்பத்திலுள்ள ஆண்கள் மீது பொருளாதார ரீதியில் தங்கி வாழ்தல் (68), சமூக மனப்பாங்கு (64), பாரம்பரிய அடிப்படைகளின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள சமூகக் கட்டுப்பாடுகள் (76), கட்டமைப்பு ரீதியான விலகல்கள் (45), தலைமத்துவத்திறன் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியின்மை (55), தன்னம்பிக்கையின்மை மற்றும் சமூகத்தின் மீதான அச்சம் (58) என்பனவே அந்தக் காரணங்களாகும்.
இந்நிலையில் மேற்படி ஆய்வின் பிரகாரம் பொதுவான களத்துக்கான தேடல் அமைப்பினால் அரசியலில் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டை செயற்திறன்மிக்க வகையில் நடைமுறைப்படுத்தல், கட்சி வேட்பளர்கள் தெரிவின்போது உள்ளக ஜனநாயகத்தை வலுப்படுத்தல், பெண் தலைமைத்துவங்களை இலக்குவைக்கும் மீறல்கள், போலிச்செய்திகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





