நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து ஏதேனும் சிக்கல்கள் எழுந்துள்ளதா என குழுவின் தலைவர் வினவினார்.
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்துக்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய நிலக்கரித் தொகுதி குறித்து ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா உள்ளிட்ட குழுவினர் 27-01-2026அன்று இக்கள விஜயத்தை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்ச்சைக்குரிய நிலக்கரித் தொகுதி தொடர்பான உண்மைகளைக் கண்டறியும் பணிக்காகத் தமது குழு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்துப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்தத் தரமற்ற நிலக்கரித் தொகுதியினால் மின் உற்பத்திக் குறைவு மற்றும் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதங்கள் உட்பட பல சிக்கல்கள் உருவாகியுள்ளன. அரசாங்கமும் இந்தப் பிரச்சினையை ஏற்றுக்கொண்டுள்ளது. இது எரிசக்தித் துறையின் பாதுகாப்புடன் தொடர்புடையது என்பதால் மிகவும் தீவிரமான விடயமாகும் என அவர் குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதி நிபந்தனைகளில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாற்றங்கள் காரணமாகவே இந்தத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிவதாகவும் அஜித் பி. பெரேரா மேலும் தெரிவித்தார். இதேவேளை, மின் உற்பத்திக்காக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தொடர்பான விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தலைமையிலான இக்குழு அண்மையில் கூடியபோதே இந்த மீளாய்வு இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்திற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது, நிலக்கரி இறக்குமதி செயல்பாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து அதிகாரிகளிடம் குழுவினர் விளக்கங்களைக் கோரினர். குறிப்பாக, அண்மைய நிலக்கரி இறக்குமதிகளின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறித்து ஏதேனும் சிக்கல்கள் எழுந்துள்ளதா என குழுவின் தலைவர் வினவினார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், இலங்கைக்கு வந்த மூன்று நிலக்கரி கப்பல்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் தரப் பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அறிக்கைகள் கிடைத்தவுடன் துல்லியமான தகவல்களை வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
அதற்கமைய, குழுவின் நடவடிக்கைகளின் போது இவ்விடயம் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இந்த நிலக்கரித் தொகுதிகளை இறக்குமதி செய்யும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்த லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவரை அடுத்த கூட்டத்திற்கு அழைப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வந்த மூன்று கப்பல்களில் உள்ள நிலக்கரியின் தர அறிக்கைகள் மற்றும் அண்மையில் வந்த கப்பலின் நிலக்கரி தரம் தொடர்பாக இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக அறிக்கைகளை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





