இலங்கைக்கு நன்கொடை வழங்கிய 7 இராஜதந்திரிகள்
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் எழுவர் இணைந்து தமது தனிப்பட்ட சம்பளத்தில் குறித்தவொரு தொகையை ஒதுக்கி, அதன்மூலம் நன்கொடையாகத் திரட்டிய 3.6 மில்லியன் ரூபாவை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் கையளித்துள்ளனர்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இலங்கைக்கான வெளிநாடுகளின் தூதுவர்கள் இணைந்து தமது தனிப்பட்ட சம்பளத்தில் குறித்தவொரு தொகையை ஒதுக்கி, அதன்மூலம் திரட்டிய 3.6 மில்லியன் ரூபாவை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் 11-12-2025 அன்று கையளித்துள்ளனர்.
இலங்கைக்கான இந்தோனேசியத் தூதுவர் டெவி கிஸ்டினா டொபிங், இலங்கைக்கான கொரியத் தூதுவர் லீ மியொன், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத், இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம்.கலீல், கொழும்பிலுள்ள ஓமான் தூதரகத்தின் உள்ளக விவகாரங்களுக்கான அதிகாரி செயிட் அல் ஹர்பி மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகத்தின் உள்ளக விவகாரங்களுக்கான பிரதி பொறுப்பதிகாரி அல்பேர்ட்டோ அர்ஸிடியகொனோ ஆகிய எழுவரே மேற்குறிப்பிட்டவாறு தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய இராஜதந்திரிகளாவர்.





