ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஞானசார தேரர் நிராகரித்திருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னெலிகொடவின் மனைவியான சந்தியா ஏக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த பின்னரே உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை 10-09-2026 அன்று வழங்கியுள்ளது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்திற்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதன் மூலம் நீதிமன்றத்திற்கும் அரச சட்டத்தரணிகளுக்கும் அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னாள் நீதிவானும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிவான் ரங்க திசாநாயக்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாகச் சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஞானசார தேரர் நிராகரித்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைகளின் முடிவில், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளுக்குப் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு 2018 ஒகஸ்ட் 8 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அத்தண்டனையை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.





