இந்திய பாதுகாப்பு அமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு
இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின் போது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பன்முகத் தொடர்புகள் மற்றும் இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று, கலாசார மற்றும் மக்கள் ரீதியிலான பிணைப்புகளை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான, நேர்மறையான மற்றும் தொடர்ச்சியான தொடர்புகளை பேணிச் செல்வதன் அவசியத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகள் குறித்தும், பிராந்திய வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதலின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். மேலும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்த அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான தொடர்புகள் பேணப்பட வேண்டும் என்றும் இச்சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.





