குமாரர்களின் நிறுவனங்களுடன் தற்போதைய அநுரவும் நிலக்கரி இரகசிய ஒப்பந்தம்: சம்பிக்க ரணவக்க
8 ஆவது கப்பல் வரை ஏற்பட்ட நட்டம் 7.67 பில்லியன் ரூபாவாகும். தற்போது வந்துள்ள 9 ஆவது கப்பலினால் மாத்திரம் சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ராஜபக்ச குமாரர்களின் நெருங்கிய உறவினர்களுக்குச் சொந்தமானவை என தற்போதைய அநுர அரசாங்கத்தினால் விமர்சிக்கப்பட்ட அதே நிறுவனங்களுடனேயே இன்றும் நிலக்கரி கொள்வனவுக்கான இரகசிய ஒப்பந்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் 23-02-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியில் ஈடுபட்ட பிளாக் சேண்ட் எனும் நிறுவனமே தற்போது பொடென்ஷியா எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. முன்னைய ஆட்சியாளர்களின் பிள்ளைகளுக்குச் சொந்தமான ஊழல் நிறைந்த நிறுவனம் என விமர்சித்த இதே பொடென்ஷியா நிறுவனத்திடமே தற்போதைய அரசாங்கம் 15 நிலக்கரி கப்பல்களைக் கொள்வனவு செய்துள்ளது.
அமைச்சர் ரஷ்யாவிற்குச் சென்று அந்த நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் வந்த 5 கப்பல்களில் 3 கப்பல்கள் இரத்து செய்யப்பட்டு 2 மாத்திரமே எடுக்கப்பட்டன. இதில் என்ன ஒப்பந்தம் நடந்தது என்பது எமக்குத் தெரியாது. ஆனால் இது திட்டமிட்ட ஊழல் என்பது தெளிவாகத் தெரிகிறது.இந்த கொள்வனவு முறைகேடுகளால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.
8 ஆவது கப்பல் வரை ஏற்பட்ட நட்டம் 7.67 பில்லியன் ரூபாவாகும். தற்போது வந்துள்ள 9 ஆவது கப்பலினால் மாத்திரம் சுமார் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கப்பலிலிருந்தும் சராசரியாக 90 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது. உலகச் சந்தையில் நிலக்கரி விலை ஒரு மெட்ரிக் தொன் 400 டொலரிலிருந்து 80 டொலர் வரை குறைந்திருந்தாலும் அதன் பயனை மக்களுக்கு வழங்காமல் இலாபத்தை விநியோகஸ்தர்களுக்கே அரசாங்கம் தாரை வார்த்துள்ளது.
பழைய திருடர்களைப் பிடிப்போம் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் இன்று அதே குமாரர்களின் நிறுவனங்களிடமே நிலக்கரியைப் பெறுகிறது. இந்தியாவிஸில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரின் நிறுவனத்திடமே இறுதியாக நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது.
2010 மற்றும் 2015 காலப்பகுதியில் நான் அமைச்சராக இருந்தபோது மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றிக் காட்டினேன்.
2012 இல் தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டுவந்த 5 கப்பல்களுக்கான கொடுப்பனவை நான் நிராகரித்ததுடன் நிலக்கரி நிறுவன தலைவரை 24 மணித்தியாலங்களுக்குள் பதவியிலிருந்து நீக்கினேன். அத்தகைய உறுதியான தலைமைத்துவம் இந்த அரசாங்கத்திடம் இல்லை.
மத்திய சுற்றாடல் அதிகார சபையோ அல்லது வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையோ இந்த நிலக்கரியால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த நட்டத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் மின்சாரக் கட்டண உயர்வு ஊடாக மக்கள் மீது சுமத்த அரசாங்கம் முயன்றால் நாட்டின் 75 இலட்சம் மின் நுகர்வோரையும் திரட்டி நாம் வீதியில் இறங்குவோம் என்றார்.





