புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு எதிராக அரசாங்க கொள்கை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
அரசாங்கம் கொண்டுவந்துள்ள தரம் குறைந்த நிலக்கரி மூலம் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமற்ற நிலக்கரி மோசடிக்கு மேலதிகமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு எதிராக அரசாங்கக் கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-04-2026 அன்று இடம்பெற்ற மின்வலு சக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தின் நிலக்கரி கொள்வனவில் நிலக்கரித் துறையில் சாதாரண மோசடி அல்ல, மாறாக பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்தமையே அந்த மோசடியாகும். இந்த நிலக்கரி மோசடிக்கு மேலதிகமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு எதிரான அரசாங்கக் கொள்கையொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒருபுறம் எரிபொருள் மாபியாவிற்கு இடமளித்துவிட்டு, மறுபுறம் சூழலுக்கு உகந்த, குறைந்த செலவிலான மற்றும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அழிக்கும் இந்தச் சதி மிகவும் பாரதூரமானது. இந்த அனைத்துக் காரணிகளின் அடிப்படையிலும், எரிசக்தி அமைச்சர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பது தார்மீக ரீதியானது அல்ல என்பதே எமது நம்பிக்கையாகும்.
மேலும் தரமற்ற நிலக்கரி குறித்து நாங்கள் வாதங்களை முன்வைத்தபோது, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வரிசையாக வந்து என்ன கூறியது? அவ்வாறான தரம் குறைந்த நிலக்கரி பிரச்சினை எதுவும் இல்லை என்றே கூறினார்கள். ஆனால், தரவுகள் மூலம் நிலக்கரி தரமற்றது என நிரூபிக்கப்பட்டபோது, நிலக்கரி தரம் குறைந்ததுதான் ஆனால் மோசடி எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் அரசாங்கம் கொண்டுவந்துள்ள தரம் குறைந்த நிலக்கரி மூலம் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தியை பெற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தெரிவிப்பது பொய் என்றால் ஆணைக்குழுவின் அறிக்கை பொய் என தெரிவிக்க வேண்டும்.
அதேபோன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரம் குறைந்த நிலக்கரி 9 கப்பல்கள் மூலம் நாட்டுக்கு 8.4 பில்லியன் ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின் உற்பத்தி குறைந்துள்ளதன் மூலம் மின் துண்டிப்புக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.





