இல்லாத பிரதான சூத்திரதாரியை தேடுவது பயனற்றது - சரத் வீரசேகர
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கத்துக்கமையவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ.நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
குண்டுத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்கள் இதுவரை காலமும் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், பிரதான சூத்திரதாரி இருப்பதாகவும் குறிப்பிடவில்லை. ஆகவே இல்லாத பிரதான சூத்திரதாரியை தேடுவது பயனற்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் சமூகத்தில் இன்றும் உள்ளார்கள்.அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் 21-04-2026அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் 735 பேர் கைது செய்யப்பட்டார்கள். 79 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 9 மாகாணங்களிலும் 25 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 25,753 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் தேசிய மக்கள் சக்தி கத்தோலிக்க மக்களின் வாக்குகளை பெறுவதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. பிரதான சூத்திரதாரி உள்ளார் என்று குறிப்பிட்டது.அதனால் தான் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தார்.
குண்டுத்தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள், பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் மற்றும் விசாரணை குழுக்கள் இதுவரை காலமும் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளில் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகவும், பிரதான சூத்திரதாரி இருப்பதாகவும் குறிப்பிடவில்லை.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் நோக்கத்துக்கமையவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் எப்.பி.ஐ.நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இவ்வாறான பின்னணியில் பிரதான சூத்திரதாரி பற்றி ஆராய்வது பயனற்றது.
விடுதலை புலிகள் அமைப்பை இல்லாதொழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பினரை மகிழவிப்பதற்காகவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இல்லாத பிரதான சூத்திரதாரியை தேடுவது பயனற்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் சமூகத்தில் இன்றும் உள்ளார்கள்.அவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.





