அரசாங்கத்தால் தேசிய விவசாய கொள்கையைக் கூட அமல்படுத்த முடியாது - எதிர்க்கட்சி தலைவர் சஜித்
தேர்தலின் போது தருவதாகக் கூறிய 150 ரூபா உறுதிமொழி விலை இன்று வெறும் காகித அளவிலேயே உள்ளது.
தேசிய விவசாயக் கொள்கையொன்றை முறையாக அமல்படுத்துவது குறித்து எவ்வித புரிதலும் இல்லாத தற்போதைய அரசாங்கம், திட்டமிட்டே இந்நாட்டின் பல இலட்சக்கணக்கான விவசாயிகளை வறுமைக்குள் தள்ளி அநாதரவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 'நடமாடும் நூலகங்கள்' எனத் தம்பட்டம் அடித்து, எளிய மக்களின் அரசியல் பேசுவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த தேசிய மக்கள் சக்தி, தற்போது மாறி விவசாயிகளை மறந்துவிட்டது. தேர்தல் காலத்தில் விவசாயிகளை அரசர்கள் எனக் கொண்டாடியவர்கள், இன்று தங்களை ஆட்சியில் அமர்த்திய அதே விவசாயிகளை 'போலி விவசாயிகள்' என்றும் அவமதித்து வருகின்றனர்.
நாட்டில் வறுமையில் வாடும் 30 - 40 சதவீத மக்களுள் பெரும்பாலானோர் விவசாயிகளாவர். தரம் குறைந்த எரிபொருள் மற்றும் கிருமிநாசினிகளின் இறக்குமதி, உர மானியம் தகுந்த நேரத்தில் வழங்கப்படாமை மற்றும் விவசாய உபகரணங்களின் விலை உயர்வு போன்றவற்றால் இன்று விவசாயிகளின் உற்பத்திச் செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகும் என விவசாய அமைச்சரே பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் நெல்லுக்கான கொள்வனவு விலையை 120 ரூபாவாகவே நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 17 ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. தேர்தலின் போது தருவதாகக் கூறிய 150 ரூபா உறுதிமொழி விலை இன்று வெறும் காகித அளவிலேயே உள்ளது.
மனித - யானை மோதல் மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணாத இந்த அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பேசுவதற்கு இன்று இடமளிக்கப்படுவதில்லை. கடந்த காலங்களில் பொய் வாக்குறுதிகளை வழங்கி 69 இலட்சம் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியை மக்கள் எவ்வாறு விரட்டியடித்தார்களோ, அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் பிரம்மாண்ட போராட்டத்தையும் இந்த நாட்டின் விவசாயிகளே முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
எனவே, இனியாவது அரசாங்கத்தின் போலித்தனமான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என விவசாயிகளிடம் கேட்டுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், தனக்கு எத்தகைய தடைகள் வந்தாலும் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தான் தொடர்ந்து குரல்கொடுப்போம் என்றார்.





