25000 ரூபா கொடுப்பனவு முறையாக மக்களை சென்றடையவில்லை: ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் 'மூச்சு' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலை கட்டமைப்பினை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகளை தூய்மைப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25000 ரூபா இன்னும் முறையாக மக்களை சென்றடையவில்லை. அது வெறுமனே ஊடக பிரசாரங்களுக்கு வரையறுக்கப்பட்டதாகவே உள்ளது. எனவே இந்த செயற்திட்டத்தில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட்டு அரச அதிகாரிகள் சுயமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 15-12-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்று இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும் வீடுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25000 ரூபா இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை. இந்த கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஊடக பிரசாரங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டவையாகவுள்ளன. அது மாத்திரமின்றி அவை முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருபுறம் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதனால் அரச அதிகாரிகளுக்கு சுயமாக அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. ஆனால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி முன்னெடுத்த திட்டங்கள் தற்போது எங்கே என கேள்வியெழுப்பப்படுகின்றன. நாம் இவற்றைக் கொண்டு அரசியலில் ஈடுபட ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் 'மூச்சு' வேலைத்திட்டத்தின் மூலம் வைத்தியசாலை கட்டமைப்பினை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பல இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியிருக்கின்றோம். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை சேகரிக்கும் பெலவத்தை அலுவலகத்திலிருந்து மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது? எதிர்க்கட்சியை விமர்சிப்பதை விடுத்து மக்களுக்கு சேவையாற்றுமாறு பெலவத்தை சகோதரர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
அது மாத்திரமின்றி தித்வா புயல் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்க்கட்சிக்கு அதிகாரம் கிடைக்கும் வகையில் தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்பட வேண்டும். இந்நிலையில் நாட்டில் கணக்காய்வாளர் ஒருவர் இன்றி நாடு நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நிதி ஒழுக்கங்கள் தொடர்புடைய பிரதான அரச நிறுவனமாக கணக்காய்வாளர் திணைக்களம் காணப்படுகிறது. அவ்வாறிருக்கையில் கணக்காய்வாளர் ஒருவர் இன்றி நாடு நிர்வகிக்கப்படுவது தவறான முன்னுதாரணமாகும். எனவே இந்த பதவி வெற்றிடத்தை நிறைவு செய்ய அரசாங்கம் முறையான நடவடிக்கைககளை எடுக்க வேண்டும் என்றார்.





