ரக்கிதவுக்கு பிணை சதுரவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
பிணை உத்தரவைத் தொடர்ந்து, தேவையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த ரகித ராஜபக்ஷ மற்றும் மற்றொரு சந்தேகநபர் விடுவிக்கப்பட்டனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹரக்கட்டாவின் மனைவியிடம் 1200 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஒரு மாதகாலமாக விளக்கமறியவில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருண ஆகியோருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
முந்தைய வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் பிணை மனுக்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதற்கமைய பிணை உத்தரவை அறிவித்த கோட்டை நீதவான் அசங்க எஸ். போதரகம, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கினார்.
பிணையாளிகள் பிணைத்தொகைக்கு ஈடான வருமானம் அல்லது சொத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
கூடுதலாக, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு நீதிவான் உத்தரவிட்டார்.
பிணை உத்தரவைத் தொடர்ந்து, தேவையான பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த ரகித ராஜபக்ஷ மற்றும் மற்றொரு சந்தேகநபர் விடுவிக்கப்பட்டனர்.
இருப்பினும், சரித் அபேசிங்க பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.





