நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இப்போது அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்கட்சியையும் அழிக்கும் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. அதனால் 1946 இல் அனைவரும் ஒன்றுபட்டு சுதந்திர இலங்கையை உருவாக்கியதுபோன்று தற்போது அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி 06-09-2026 அன்று முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட விசேட விடியோ பதிவொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 1946 செப்டம்பர் 06 ஆம் திகதி டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான குழுவினரால் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப கால உறுப்பினர்கள் இன்று இல்லாவிட்டாலும், அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இக்கட்சியுடன் இணைந்து செயற்படும் குழுக்களாக உள்ளனர். ஆரம்ப கால உறுப்பினர்களில் டி. ஏ. ராஜபக்ஷ்வும் ஒருவர். அவரின் இரு புதல்வர்கள் இநாட்டின் ஜனாதிபதிகளாகச் செயற்பட்டனர்.
இன்று ஐக்கிய தேசிய கட்சியின் 80 ஆவது ஆண்டு நிறைவு ஆரம்பமாகிறது. செப்டம்பர் 17 ஆம் திகதி ஜே. ஆர். ஜெயவர்தன ஜனாதிபதியின் 120 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இங்கிருந்து ஆரம்பித்து, நாட்டுக்குச் செய்த சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி டிசம்பர் மாதம் மாநாடு நடத்தப்படும். அன்றைய தினத்தில் நவீன ஐக்கிய தேசிய கட்சி உருவாகும். நவீன ஐக்கிய தேசிய கட்சிக்கு இன்றைய கருத்துக்களுக்கேற்ப கொள்கைகளைத் தயாரித்து, புதிய முகங்களை இணைத்து, 21 ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான இலங்கையை உருவாக்க நான் எதிர்பார்க்கிறேன்.
1948 இல் டி.எஸ் சேனாநாயக்க, எச். ஆர். டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட பல தலைவர்கள் இந்நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தனர். நாம் இறைமையுள்ள நாடாகச் செயற்பட்டோம். 1972 மே 22 ஆம் திகதி குடியரசு அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த அரசியலமைப்பு மூலம் நாட்டின் இறைமை மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அதனைச் செயற்படுத்தும் அதிகாரம் தேசிய அரச பேவையிடம் ஒப்படைக்கப்பட்டது.
1977 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மூலம் இதில் சில திருத்தங்களைக் கோரினோம். அதில் பிரதானமானது மக்கள் இறைமை மக்களால் நேரடியாகச் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். 1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவில் நாட்டின் இறைமை மக்களுக்கு உரியது என்றும், அதனை அந்நியப்படுத்த முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 4 ஆம் பிரிவின் மூலம் இறைமையை செயற்படுத்தும் பிரதிநிதித்துவ நிறுவனங்களாக பாராளுமன்றம், ஜனாதிபதி மற்றும் நீதித்துறை ஆகியவை குறிப்பிடப்பட்டன.
ஆனால் இன்று இம்முறைமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அது மக்கள் இறைமையை அங்கீகரிக்காமையாகும். அரசாங்கத்திடமிருந்து சர்வஜன வாக்கெடுப்பு தேவை எனக் குறிப்பிடப்படாத காரணத்தினாலேயே நாம் குறிப்பாக 22 ஆவது திருத்தச் சட்டத்தை நாங்கள் எதிர்த்தோம். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமென்று குறிப்பிடப்படாத காரணத்தினாலேயே நாங்கள் அதனை எதிர்த்தோம். இதனால் நீதிமன்றத்தின் மூலம் சர்வஜன வாக்கெடுப்பைக் கோரினோம், அதன் மூலம் அதன் சட்டபூர்வ தன்மையை ஏற்படுத்த முடியும்.
ஆனால் இன்று முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் ஒவ்வொரு குழுக்கள், அரசியல் கட்சிகளுக்கான கட்டுப்பாடுகள், இடையூறுகள் மற்றும் அரசியல்வாதிகளை காரணமின்றி கைது செய்வதை காண முடிகிறது. இவற்றின் மூலம் நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அழிக்கவே பார்க்கிறார்கள். அதேபோல் சுயாதீன தொழிற்சங்கங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.
இப்போது சட்டத்தரணிகள் சங்கத்திற்கு எதிராகவும், பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இவை அனைத்தின் மூலமும் நாட்டின் அரசியலமைப்பும், மக்களின் இறையாண்மையும் இல்லாமல் செய்யப்படுகின்றன.
அதேபோன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு பேசுவதற்காக இடமளிக்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவை அழைத்த போது, அவர் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பார்க்கும் போது, இந்நாடு எங்கிருந்து ஆட்சி செய்யப்படுகிறது? பாராளுமன்றத்திலிருந்தா அல்லது பெலவத்தையிலிருந்தா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பின் 3ஆவது சரத்தைப் பாதுகாக்க வேண்டும், 9ஆவது சரத்தின் படி பௌத்த மதத்தைப் பாதுகாக்க வேண்டும்.
1946 இல் அனைவரும் ஒன்றுபட்டு சுதந்திர இலங்கையை உருவாக்கினோம். அதேபோன்று இப்போது அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்போம். அதனால் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
விசேடமாக எமது கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் டி. ஏ. ராஜபக்ஷவின் பேரனான நாமல் ராஜபக்ஷவுக்குக் கட்சியின் ஆண்டு நிறைவு விழா நிகழ்விற்காக அழைப்பு விடுத்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக நாமல் ராஜபக்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் செயற்பாட்டிற்கு எனது மற்றும் கட்சியின் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





