ஜனாதிபதிக்கு எல்லே குணவங்ச தேரர் கடிதம்
இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்ட நடைமுறை ஆரம்பத்திலிருந்தே தவறானது என்றும், அதற்குச் செல்லுபடித்தன்மை இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்கான தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறும், அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளுமாறும் கோரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில், பிரதமரின் தலைமையில் முன்மொழியப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான கல்விச் சீர்திருத்தங்கள், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடும், மக்களும், மகா சங்கத்தினரும் (பௌத்த சாசனம்) பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதை உறுதிப்படுத்துவதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களையோ அல்லது நாட்டையோ பற்றி அக்கறை காட்டாத இத்தகைய பலவீனமான அரசாங்கம், தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் அவர் அந்தச் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பௌத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்கள், ஆசிரியர்கள் அல்லது கல்வி நிபுணர்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படாததால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்ட நடைமுறை ஆரம்பத்திலிருந்தே தவறானது என்றும், அதற்குச் செல்லுபடித்தன்மை இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு பௌத்த பிக்கு என்ற ரீதியில் தனது வரலாற்றுப் பொறுப்பை நிறைவேற்றுவதாகக் குறிப்பிட்ட எல்லே குணவங்ச தேரர், நாட்டுத் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, நாட்டைப் பாதுகாக்கவும், மக்களையும் மகா சங்கத்தினரையும் இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றவும் விரைவாகச் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.





