புத்திஜீவிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் அரசிடம் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு எனும் பெயரில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரைவு தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், மிகுந்த அதிருப்தி அடைகின்றோம்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 'பிளஸ்' வடிவமாகும். எனவே அவ்வரைவை உடன் வாபஸ் பெறுவதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இப்புதிய சட்டவரைவு தொடர்பான தமது கரிசனைகளைத் தெளிவுபடுத்தி பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், கலாநிதி ரமிலா யூஸுஃ;ப், கலாநிதி ரணில் டி.குணரத்ன, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் உள்ளடங்கலாக புத்திஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் 104 பேரும், சிறுபான்மையினரின் கூட்டிணைவு, சமூக அபிவிருத்திக்கான கற்கைகள் நிலையம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சட்ட மற்றும் சமூக நிதியம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் உள்ளிட்ட 18 சிவில் சமூக அமைப்புக்களும், கூட்டு ஆசிரியர் சேவை சங்கம், கூட்டு புகையிரத ஊழியர் சங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம், கூட்டு சுகாதார ஊழியர் சங்கம் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களும் இணைந்து அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு எனும் பெயரில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரைவு தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், மிகுந்த அதிருப்தி அடைகின்றோம். கடந்த 2025 ஜனவரி 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீங்கள் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வாக்குறுதி உங்களது அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னரும், ஏறிய பின்னரும் வெளியிட்ட கொள்கை நிலைப்பாடுகளில் தொடர்ந்து உள்வாங்கப்பட்டது. அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு மேமாதம் 29 ஆம் திகதி உங்களது அமைச்சில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின்போது அந்த வாக்குறுதி மீளுறுதிப்படுத்தப்பட்டதுடன், புதிய சட்டத்தை உருவாக்கும் பணிகள் வெறும் வெள்ளைத்தாளில் இருந்து பொதுமக்களுடனான பரந்துபட்ட கலந்துரையாடலுடன் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அவ்வாறிருக்கையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 'பிளஸ்' வடிவமாகும். இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் நாங்களும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி நீங்களும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் எழுதப்பட்ட மிகமோசமான வரலாற்றைப் பார்த்திருக்கின்றோம். நாம் பயங்கரவாதம் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவற்றின் ஊடாக சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதம் தொடர்பில் மிகுந்த அச்சமடைகின்றோம்.
சாதாரண பிரஜைகள் பலரது வாழ்க்கை பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் தலைகீழாக மாறிப்போயிருக்கும் அதேவேளை, இலங்கை அரசு அதனை அங்கீகரிக்கவோ அல்லது உரிய இழப்பீடுகளை வழங்கவோ இல்லை. பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பது ஒடுக்குமுறைகளுக்கும், அநீதிக்கும், வன்முறைகளுக்கும், இனவாதத்துக்கும், சமத்துவமின்மைக்கும், சர்வாதிகாரத்துக்குமான ஓர் ஆயுதமாகும். அது சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் முற்றுமுழுதாகப் புறந்தள்ளியிருப்பதுடன், இப்போது உங்களது தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஊடாகத் தீர்வுகாண்பதற்கு முயன்றுவரும் ஆழமான பிளவுகளையும் தோற்றுவித்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இப்புதிய வரைவு வெளியிடப்பட்டிருப்பதனை, வலுவான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இச்சட்டமூலத்தை எவ்வாறேனும் நிறைவேற்றிவிடவேண்டும் அல்லது இதற்கு எதிரான போராட்டங்கள் வலுக்கும் பட்சத்தில் இச்சட்டமூலத்தை வாபஸ் பெற்றாலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நடைமுறையில் இருக்கும் என்ற எண்ணப்பாட்டுடன் தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு முயற்சியாகவே கருதத்தோன்றுகிறது. எனவே தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறப்படுவதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதை நாம் தெளிவாக வலியுறுத்துகின்றோம்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நோக்குகையில் பயங்கரவாதத்துக்கெனப் பிரத்யேக சட்டமொன்று அவசியமில்லை. எனவே பயங்கரவாதத்தடை சட்டத்தின் தொடர் பிரயோகம் அவசியமற்றது. அத்தோடு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் எனும் பெயரில் அச்சட்டத்துக்கு அப்பால் சென்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் 'பிளஸ்' வடிவம் எவ்வகையிலும் தேவையில்லாதது என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.





