இலங்கையை அண்மித்து 2 ஆவது ஈரானிய கப்பல் இல்லை - அமைச்சர் நளிந்த
ஈரானுக்கு சொந்தமான கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது.
இலங்கையின் கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் இல்லை அது இலங்கையின் கடற்பரப்பை அண்மித்த பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் உள்ளது. இந்து சமுத்திரத்தில் பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுகின்றன. பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போதைய நெருக்கடி நிலையில் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட எண்ணங்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சிகளின் பிரதம கொறடாவும்,அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 05-03-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளாகி,மூழ்கிய ஈரானிய கப்பல் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது: எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும். பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களைக் குறைக்கவும், வலய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை மேற்கொண்டுள்ளோம்.இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஒரு நாடாக இலங்கை சர்வதேச அமைதிக்காகச் செயற்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் அமைதியே எமது எதிர்பார்ப்பாகும். கூறப்பட்டதை விட அதிகமான விடயங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்கத் தலையிடுகிறோம். மேலதிக தகவல்களைப் பின்னர் வெளிப்படுத்துவோம்.
ஏற்றக்கொள்ளப்பட்ட சர்வதேசச் சாசனங்களுக்கு அமைவாக, உயிர்ச் சேதங்களைக் குறைக்கும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் பொறுப்புடன் செயற்படுகின்றோம். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழல் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
எனவே, இவ்வாறானதொரு நேரத்தில் பாராளுமன்றத்தையோ அல்லது ஊடகங்களையோ பயன்படுத்தி நகைச்சுவை செய்வதற்கோ, அரசியல் கோபங்களைத் தீர்த்துக்கொள்வதற்கோ, திரிபுப்படுத்தப்பட்ட அல்லது அரைகுறை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ இது நேரமல்ல. உலகளாவிய ரீதியில் இவ்வாறானதொரு சூழ்நிலை நிலவும் போது. ஒவ்வொரு அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதியும் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
இலங்கையின் கடற் கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையான தேசிய கடற்பரப்பு எமக்குச் சொந்தமானது. அந்த 12 முதல் 200 கடல் மைல்கள் வரை இருப்பது பிரத்தியேகப் பொருளாதார வலயம். இந்த வலயத்தில் சர்வதேச சட்டம் அமுலில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அங்கு எமக்கு அதிகாரம் உள்ளது, இராணுவ நடவடிக்கைகளுக்கு அல்ல.'
ஈரானுக்கு சொந்தமான கப்பல் தாக்கப்பட்ட சம்பவம் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. இது தொடர்பில் நேற்று (நேற்று முன்தினம்) அதிகாலை 5.08 மணிக்கே கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்தது. தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் அல்ல, அப்பகுதியில் சடலங்கள் மிதக்கின்றன என்ற தகவலே முதலில் கிடைத்தது.
ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தாக்குதல் குறித்துத் தேடுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கமாக காணப்பட்டது.உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே குறிப்பிட முடியும் என்றார்.





