அமெரிக்காவுக்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் கண்டனம்
அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனமான இராணுவ தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.
வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அந்த நாட்டின் இறையாண்மையை வொஷிங்டன் மீறுகின்றது. ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் வெனிசுவேலா மக்களின் இறையாண்மையை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை கிடையாது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) குறிப்பிட்டுள்ளது.
04-01-2026 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டு அக்கட்சி இதனைத் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசான வெனிசுவேலாவுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் சிறைபிடித்துச் சென்று, அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புத் தலையீட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
உலகில் உள்ள ஏனைய சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, வெனிசுவேலாவினதும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மற்றும் ஆட்சியாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறையாண்மை அதிகாரம் அந்த நாட்டு மக்களுக்கே உள்ளது. அதனை மீறுவதற்கு எந்தவொரு வல்லரசுக்கும் உரிமை கிடையாது.
நவீன சமூகமும், அரச நிர்வாகமும் மிகவும் நாகரீகமானதாக அமைய வேண்டும் என்பது பொதுவான ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். ஜனநாயகம், மனித உரிமைகள், நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை என்பன உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்களாகும். எந்தவொரு காரணத்துக்காகவும் இவற்றை மீறி, நாடுகளுக்குள் இராணுவத் தலையீடுகளை அல்லது ஆக்கிரமிப்புகளை மேற்கொள்வது நவீன உலகில் நியாயமானதாக அமையாது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த அடாவடித்தனமான இராணுவ தலையீட்டை உலகில் எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். எனவே, அமெரிக்காவினால் வெனிசுவேலாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம், வெனிசுவேலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக முன்னிற்போம்.





