சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தை அடுத்தே அடுத்தகட்டக் கைதுகள் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் போது அவர்களால் கூறப்படும் காரணிகள் குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்படும்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை. புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அடுத்தகட்டக் கைதுகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 17-03-2026 அன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எவரேனும் ஒருவரால் வெளிப்படுத்தப்படும் கருத்துக்கள் ஏதேனுமொரு விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொலிஸாரால் இனங்காணப்பட்டால், அது தொடர்பில் பொலிஸாரால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சுரேஸ் சலேவுக்காக குரல் கொடுப்பவர்கள், அவர்களுடன் நீண்ட நாட்களில் அரசியலில் ஈடுபட்ட மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்காக குரல் கொடுக்க முன்வரவில்லை.
விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படும் போது அவர்களால் கூறப்படும் காரணிகள் குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்படும். எதிர்வரும் 27ஆம் திகதி உதய கம்மன்பில தொடர்பில் வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்று அவருக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாவிட்டால், 31ஆம் திகதி அவரால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த முடியும்.
சலே வழங்கும் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அடுத்த கைதுகள், விசாரணைகள் முன்னெடுக்கப்படும். அது குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணியாகும். இவற்றில் அரசாங்கத்தின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்றார்.





