அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதல் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்துக்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி வருகின்றது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையானது நாட்டின் ஜனநாயகத்திற்கு விரோதமானதாகவும், அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வரி நிர்வாகம் தொடர்பான வரி நிபுணர்கள், தொழில்முனைவோர் மற்றும் இத்துறையோடு தொடர்புடைய ஏனைய பங்குதாரர்களுடன் 18-05-2026 அன்று இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்துக்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி வருகின்றது. யாராவது ஒரு தரப்பினர் மறந்துவிடுவதால், நோய்வாய்ப்படுவதால் அல்லது வெளிநாடு செல்வதால் ஏற்படும், அதாவது வேண்டுமென்றே செய்யப்படாத அலட்சியத்தின் காரணமாக வரி நிர்வாக நிபந்தனைகளை நிறைவேற்றாமல் போவதைக் குற்றச் செயலாகக் கருதும் வரி நிர்வாக முறையொன்றை அரசாங்கம் கொண்டு வர முயற்சிக்கிறது. இது அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கையாகும். சிறையில் அடைப்போம் என்று மிரட்டுவதன் மூலம் வரிகளை அறவிடுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது வியாபார சமூகத்தை அச்சுறுத்துவதாக அமைந்துள்ளதுடன், புதிய தொழில்முயற்சிகள் உருவாவதற்கும், ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள தொழில்முயற்சியாண்மைகளை விரிவுபடுத்துவதற்கும், புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மேலும், இந்த புதிய விதிகள் நீதித்துறை அதிகாரத்திற்கே சவால் விடுத்து, அரசியலமைப்பையும் மீறும் விடயமாக அமைந்துள்ளன. அதிகாரங்களுக்கிடையிலான பொதுவான தடைகள் மற்றும் சமன்பாடுகள் என்ற கோட்பாடும், முக்கிய ஜனநாயக நிறுவனங்களான சட்டவாக்கம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் அதிகார சமநிலையும் இதனால் மீறப்படுகின்றன.
இச்சந்தர்ப்பத்தில், வரி செலுத்த வேண்டிய சகலரும் தமது வரிகளைச் செலுத்த வேண்டும். வரிகளைச் செலுத்தாது இழுத்தடிப்புச் செய்யும் வேலையைச் செய்யக் கூடாது. வரி வலைக்குள் அடங்கும் அனைவரும் கட்டாயமாக தமது வரிகளைச் செலுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சாதாரண தவறுகளைக் கூட ஒரு குற்றச் செயலாகக் கருதுவது ஜனநாயகத்தின் மீதான பாரிய தாக்குதலாகும் என்றார்.





