அனுபவங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் பகிர்ந்துகொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
இந்த முயற்சிக்காக இந்திய அரசு மற்றும் இந்திய நீதித்துறைக்கு தமது நன்றியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் போபால் தேசிய நீதித்துறை அகடமி என்பவற்றின் ஏற்பாட்டில் இலங்கை உயர்நீதிமன்றத்தின் 10 மூத்த நீதிபதிகளுக்கான அறிவுப்பரிமாற்றம் மற்றும் பரஸ்பரத் தொடர்பு பட்டறையொன்று இந்தியாவில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற மூத்த நீதிபதிகள் தமது அனுபவங்கள் மற்றும் கற்றல்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
இந்திய உச்ச நீதிமன்றம் (புதுடில்லி) மற்றும் தேசிய நீதித்துறை அகடமி, போபால் என்பன இணைந்து கடந்த 8 - 12 ஆம் திகதி வரை இலங்கை உயர்நீதிமன்றத்தின் 10 மூத்த நீதிபதிகளுக்கான அறிவுப்பரிமாற்றம் மற்றும் பரஸ்பரத் தொடர்பு பட்டறையொன்றை நடத்தியது. இப்பட்டறையில் கலந்துகொண்ட இலங்கையின் மூத்த நீதிபதிகள் குழாமுக்கு பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமைதாங்கினார்.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை (18) இலங்கை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விளக்கமளிப்பு சந்திப்பின்போது, இந்தப் பட்டறையின் அனுபவங்கள் மற்றும் முக்கிய கற்றல்கள் தொடர்பில் மூத்த நீதிபதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் பகிர்ந்துகொண்டனர். அத்தோடு இந்த முயற்சிக்காக இந்திய அரசு மற்றும் இந்திய நீதித்துறைக்கு தமது நன்றியையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
இந்த பட்டறையானது இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதன்படி போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் 3 நாட்கள் பயிற்சி அமர்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, புதுடில்லியில் 2 நாட்கள் சில நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அத்தோடு போபாலில் இந்திய நீதிபதிகள், வளவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் இலங்கையின் மூத்த நீதிபதிகள் அரசியலமைப்பு, காலநிலை நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய தொழில்நுட்ப முன்னேற்றதத்pனால் நீதித்துறைசார் சேவைகளில் ஏற்படும் மாற்றங்கள், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டப் பொறுப்புக்களில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள், நீதித்துறை பற்றிய ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை உள்ளிட்ட பல்வேறு விடயதானங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.





