காலநிலை மாற்ற சவால்களுக்கான தீர்வுகள் பாலின அடிப்படையில் அணுகப்படவேண்டும் - ஜனகா செல்வராஸ்
சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக கவனம் பெற்றிருக்கும் காலநிலை மாற்ற சவால்கள் சார்ந்து இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
தற்போது சூழலியல் பிரச்சினைகள் வெறுமனே இயற்கையுடன் தொடர்புடையவை மாத்திரமல்ல. மாறாக அவை மக்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய மனித உரிமைகள் சார்ந்த பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அதேவேளை இக்காலநிலை மாற்ற சவால்களினால் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.
எனவே இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை பாலின அடிப்படையில் அணுகுவதற்கும், அதனடிப்படையில் தீர்வுகாண்பதற்குமான ஒரு நினைவூட்டலாக அண்மைய 'தித்வா' சூறாவளி பேரனர்த்தம் அமையவேண்டும் என தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் ஜனகா செல்வராஸ் வலியுறுத்தினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'பெண்கள், காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்கள்: தித்வா புயலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் மனித உரிமைகள் அடிப்படையிலானதொரு துலங்கல்' எனும் தொனிப்பொருளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு 10-03-2026 அன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே ஜனகா செல்வராஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
சமகாலத்தில் உலகளாவிய ரீதியில் அதிக கவனம் பெற்றிருக்கும் காலநிலை மாற்ற சவால்கள் சார்ந்து இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனெனில் பெண்கள் மீதான கரிசனைகளுக்கு அப்பால், அவர்கள் முகங்கொடுத்துவரும் சவால்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு முறையான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
கடந்த காலங்களைப்போன்று தற்போது சூழலியல் பிரச்சினைகள் வெறுமனே இயற்கையுடன் தொடர்புடையவை மாத்திரமல்ல. மாறாக அவை மக்கள் மீது தாக்கம் செலுத்தக்கூடிய மனித உரிமைகள் சார்ந்த பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இக்காலநிலை மாற்ற நெருக்கடிகளால் வாழ்வதற்கான உரிமை, உணவு மற்றும் குடிநீரைப் பெறுவதற்கான உரிமை, முறையான தங்குமிடத்தைப் பெறுவதற்கான உரிமை, அபிவிருத்திக்கான உரிமை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. அண்மையில் சர்வதேச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டதொரு தீர்ப்பின் பிரகாரம், தமது நாட்டுப் பிரஜைகளின் நலனை முன்னிறுத்தி சூழல் மற்றும் அதுசார்ந்த காலநிலையைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு சகல நாடுகளின் அரசுகளுக்கும் உண்டு.
இத்தீர்ப்புக்கு அமைய காலநிலை மாற்ற சவால்கள் உடனடியாகக் கவனம் செலுத்தப்படவேண்டிய அச்சுறுத்தலாகக் கருதப்படவேண்டும். அத்தோடு காலநிலை மாற்றத்தை அடிப்படை உரிமை சார்ந்த விடயமாகக் கையாள்வதன் ஊடாக மாத்திரமே, எமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தமுடியும்.
அடுத்ததாக சகல பிரச்சினைகளின்போதும் ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பாலின அடிப்படையில் வேறுபட்டாலும், காலநிலை மாற்ற சவால்களினால் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் பெண்கள் இயற்கை அனர்த்தங்களால் மிகமோசமாகப் பாதிக்கப்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரம் முற்றாக சேதமடைகிறது. எனவே இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய தாக்கங்களை பாலின அடிப்படையில் அணுகுவதற்கும், அதனடிப்படையில் தீர்வுகாண்பதற்குமான ஒரு நினைவூட்டலாக அண்மைய 'தித்வா' சூறாவளி பேரனர்த்தம் அமையவேண்டும்.





