மீன்பிடி படகில் 161 கிலோஹெரோயின் மீட்பு 4 பேர் கைது - 400 கோடி ரூபா பெறுமதி
கரைக்கு அழைத்து வரப்பட்ட படகிலிருந்த சந்தேகநபர்களிடமும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆரம்பக்கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தெற்கு ஆழ்கடலுக்கு அப்பால் உள்ளஆழ் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் 4 சந்தேகநபர்களுடன் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகிலிருந்து 6 பொதிகளில் இருந்த 161 கிலோகிராம் எடையுடைய சுமார் 400 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மேற்படி ஆழ்கடல் மீன்பிடிப் படகு தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் 400 கிலோ மீற்ற்ர் தொலைவில்ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
கடற்படை புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து சந்தேகத்திற்கிடமான மீன்பிடிப் படகை கைது செய்திருந்தனர்.
போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நேற்று (17) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டதுடன், குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்ட 6 பொதிகளிலிருந்து 150 பைகற்றுகளில் பொதிசெய்யப்பட்டிருந்த நிலையில் சுமார் 161 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீன்பிடி படகில் பயணித்த 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் குறித்த படகு கரைக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையிடப்பட்டதுடன், தற்போது கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பாரியளவான போதைப்பொருள் சுமார் 4 00 கோடி ரூபா பெறுமதிமிக்கது எனவும் பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு கரைக்கு அழைத்து வரப்பட்ட படகிலிருந்த சந்தேகநபர்களிடமும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆரம்பக்கட்ட விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட ஆகியோர் இந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நேற்று திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தனர்.





