பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் பொய்யுரைத்தார்: சாமர சம்பத் எம்.பி.
எந்த மதத்தையும் எவரும் பின்பற்ற முடியும். திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிறிதளவான பௌத்தர்களே வாழ்கின்றனர்.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் பொய்யுரைத்தார்.அவர் எந்த மதத்தை சேர்ந்தவர் .அவருக்கு எதாவது மதம் இருக்கின்றதா என்று தெரியவில்லை. நாங்கள் பௌத்தர்கள் இதனை அலட்சியப்படுத்த முடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி. சாமர சம்பத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால திருகோணமலை புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சபைக்கு விளக்கமளித்தார். ஆனால் இன்னும் அந்த சிலை மீண்டும் அங்கு வைக்கப்படவில்லை. இப்போது அங்கு டோசர் ஒன்று வந்துள்ளது. இதனால் திருகோணமலை நகரில் இப்போது பெரிய பிரச்சினையொன்று ஏற்பட்டுள்ளது.
நாங்கள் பெளத்தர்கள். இதனால் எங்களுக்கு பிரச்சினை உள்ளது. எந்த மதத்தையும் எவரும் பின்பற்ற முடியும். திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிறிதளவான பௌத்தர்களே வாழ்கின்றனர். பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் என்ன கூறினாலும் அங்கு குறித்தப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.
அந்த அமைச்சருக்கு மதமொன்று இருக்கின்றதா? என்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு மதம் உள்ளது. இங்கு அந்த அமைச்சர் பச்சைப் பொய்களை கூறிவிட்டு போய்விட்டார். நாங்கள் பௌத்தர்கள் இதனை அலட்சியப்படுத்த முடியாது என்றார்.





