பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது: பிமல் ரத்நாயக்க
அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 26-09-2025 அன்று நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்த பின்னர் மேலதிக கேள்விகளை எழுப்பிய அர்ச்சுனா, சண்டியன் இல்லாத இடத்தில் நொண்டியனும் சண்டியன்தான். யாழ்ப்பாணம் என்பது தேசிய மக்கள் சக்தியின் வெற்றிலை பெட்டி அல்ல. நான் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கேணும் பதில் வழங்கப்படவில்லை. வடக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களின் காணிகள் பெறப்படுகின்றன. அங்கே மக்கள் காணிகளுக்காக சாகும் வரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பில் செய்த ஒரு வேலையை கூறுங்கள். கல் நடுவதாக ஆட்களை பேய் காட்டக்கூடாது. சும்மா ஆட்காட்டுதல், பேய் காட்டுதல் வேலையை யாழ்ப்பாணத்தில் வைக்க வேண்டாம். யாழ்ப்பாணம் உங்களின் வெற்றிலைப் பெட்டி இல்லை என்றார்.
இதன் பின்னர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அதற்கு பதிலளிக்காமல் சபையின் தினப் பணிகளை முன்னெடுத்து அமைச்சின் அறிவித்தலொன்றை வாசிக்க ஆரம்பித்தார். ஆனால் அர்ச்சுனா தொடர்ந்தும் பதில் கூறுங்கள் என்று அமைச்சரை நோக்கி தெரிவித்துக்கொண்டே இருந்தார்.
இவ்வேளையின் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் ஏதோவொன்றை அமைச்சரை நோக்கி கூறினார். அந்த வாட்டுக்கே உங்களையும் அனுப்ப வேண்டி வரலாம் என்று சுஜீவ சேனசிங்கவை நோக்கி அமைச்சர் பிமல் ரத்நாயக்க சிரித்தவாறு கூறினார்.
இதேவேளை அர்ச்சுனா தொடர்ந்தும் சபைக்குள் கூச்சலிட்டுக்கொண்டிருந்த நிலையில் அமைதியான இருக்குமாறு சபாநாயகரும் தொடர்ந்தும் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்.. ஆனால் அர்ச்சுனா அமைதியடையாமல் அமைச்சரை பார்த்து ஏதோவொன்றை கூறிக்கொண்டிருந்த போது ''நான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பேன் ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன். தயவு செய்து என்னை பேசுவதற்கு இடமளியுங்கள். இல்லையென்றால் இங்கே இடையூறு ஏற்படுத்துபவரை வெளியே போடுங்கள்'' என்று அமைச்சர் கூறினார்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த அர்ச்சுனா அவர் பதிலை வழங்கவில்லை. அவர் இப்போது பைத்தியம் என்று கூறுகின்றார். அந்த வசனத்தை நீக்குமாறு கோருகின்றேன். என்றார். இதனை தொடர்ந்தும் அமைச்சர் அர்ச்சுனாவுக்கு பதிலளிக்காது, அமைச்சின் அறிவித்தலை வாசித்து அமர்ந்தார்.