ரணிலிடம் தஞ்சமடைந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது: அமைச்சரவை பேச்சாளர்
தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே சகல எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்திலும் பங்கேற்றுள்ளனர்.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்பற்ற அரசியல்வாதிகள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை. மாறாக அவற்றுடன் தொடர்புடையவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கவும் முடியாது. இதிலிருந்து தப்பிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடம் தஞ்சமடைவதும் பிரயோசனமற்றது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 23-09-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை கைது செய்வதற்கு அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றிருந்த போது அவர் அங்கு இருக்கவில்லை. பக்கோ சமனின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் மறைந்திருந்தனர். இதனால் இந்தோனேஷிய பொலிஸாருக்கு அவர்கள் அனைவரையும் ஒருமித்து கைது செய்ய முடிந்தது. அச்சத்தில் அவர்கள் ஒன்று கூடியதால் தான் அனைவரும் ஒன்றாக சிக்கினர்.
அதேபோன்று தாம் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே சகல எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளனத்திலும் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு எதிர்க்கட்சியையும் ஒடுக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியலில் ஈடுபடும் அனைவரும் இந்தக் குற்றங்களுடன் எவ்வித தொடர்பும் அற்றவர்கள் என்றால் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை.
மாறாக இவற்றுடன் ஏதேனும் அரசியல் தொடர்புகள் இருந்தால் அவர்களை சட்டத்தின் முன் ஒப்படைப்பதே சிறந்ததாகும். எதிர்கால சந்ததியினர் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் இவற்றுடன் தொடர்புடைய அரசியல் தலையீடுகள் தொடர்பில் வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம். போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு அரசியல்வாதிக்கும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. அதற்காக ரணில் விக்கிரமசிங்கவிடம் சென்று தஞ்சமடைவதும் பிரயோசனமற்றது என்றார்.