செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு அடையாளம்
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 05-09-2025 அன்று 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்திருக்கும் நிலையில் எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ் . பல்கலைக்கழக இந்து நாகரிக துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு, அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன.
அவரது தனது அவதானிப்பின் படி , இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், எலும்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்டதாக இல்லை என்று தனது அவதானிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனையடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் 04-09-2025 அன்று குவியலாக அடையாளம் காணப்பட்ட எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேவேளை, செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் 06-09-2025 அன்று சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் இன்றைய தினம் நீதிவான் திகதியிடுவர் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மேலும் செம்மணி மனித புதைகுழியிலிருந்து 05-09-2025 அன்று புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், 05-09-2025 அன்று 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 05-09-2025 அன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 11 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





