மாகாண சபைத் தேர்தல் வருட நிறைவுக்குள் இறுதி தீர்மானம் எடுக்க முடியாது: அமைச்சர் சந்தன
2015-2020 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தால் எழுந்த சட்டப் பிரச்சினை காரணமாக, மாகாண சபைத் தேர்தல் எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த வருட நிறைவுக்குள் தீர்மானம் எடுக்க முடியாது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இதுவொரு நீண்டகால பிரச்சினையாகும், மேலும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டும், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் உரையாடிய பின்னரேயே இறுதியான முடிவுக்கு வரமுடியும். இறுதி முடிவை எடுக்க வேண்டுமானால் அனைவரும் ஏற்றக்கொண்டு இணக்கம் வெளியிடும் நிலையை அடைய வேண்டும் என்றார்.
2015-2020 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தால் எழுந்த சட்டப் பிரச்சினை காரணமாக, மாகாண சபைத் தேர்தல் எட்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாகாண சபைத் தேர்தல்களுக்கான சட்ட சீர்திருத்த செயன்முறையை அரசாங்கம் ஆரம்பிக்கும் என்று அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





