சுவிஸ் தூதுவருடன் மனோகணேசன் சந்திப்பு
தோட்ட காணிகளை கையக படுத்தி பெருந்தோட்ட தித்வா மக்களுக்கு வழங்க அவசர மற்றும் நில சட்டங்களின் கீழ் இலங்கைக்கு போதிய சட்ட அதிகாரம் உள்ளது.
காணி உரிமை, வீட்டுரிமை, அரசியல் உரிமை, கல்வி உரிமை, என்ற உரிமை அபிலாஷைகளை கோரிக்களை கொண்ட ஒரு தேசிய இனமாக மலையக மக்கள் வளர்ந்து விட்டார்கள். ஆனால், எமது அபிலாசைகளை, கூலி-தொழில் பிரச்சினையாக மட்டுமே சுருக்கி காட்டும் தந்திரத்தை அரசு லாவகமாக கையாள்கிறது என்று இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்டிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எடுத்து கூறியுள்ளார்.
தித்வா பேரழிவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு, மீள் கட்டமைப்பில் மிக அதிகமாக ஒதுக்கபடும் அவலநிலையை பெருந்தோட்டங்களில் வாழும் மலையக தமிழர் எதிர் கொள்கிறார்களெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும், சுவிட்சர்லாந்து தூதுவர் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில், கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில், ஜ.ம.மு. இணை உபதலைவர் பாரத் அருள்சாமி, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இமிதியாசான் நவாஸ் மற்றும் சுவிஸ் அரசியல் செயலாளர் ஜஸ்டின் பொய்லட், அரசியல் அதிகாரி கணிஷ்க ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் போது மனோ கணேசன் மேலும் கூறியதாவது:
சுவிஸ் அரசு, இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பிலும், தனது அக்கறையை விரிவு படுத்த வேண்டும். மலையக மக்களின் பரந்து பட்ட பிரச்சினைகளை தேசிய, சர்வதேசிய, தளங்களுக்கு கொண்டு வரும், அரசியல்-சிவில் உரையாடல் தளம் ஒன்றை ஏற்படுத்த, சுவிஸ் உதவிட வேண்டும். சுவிஸ் நல்லெண்ணம் எமது மக்களையும் வந்தடையும் வேளை வந்துவிட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் நேரடி சந்திப்புக்கான பதில் கிடைக்கவில்லை. மலையகத் தமிழர் சமூகத்தின் சார்பில் அரசாங்கத்திடம், சுவிஸ் அரசு உறுதியாக எடுத்து கூற வேண்டும். பேரழிவு தேசிய அளவில் இருந்த போதிலும், உயிரிழப்புகளிலும் இடம் பெயர்விலும் தோட்ட தொழிலாளர் சமூகமே, அதிகமாக பாதிக்கப்பட்டது. தோட்ட காணிகளை கையக படுத்தி பெருந்தோட்ட தித்வா மக்களுக்கு வழங்க அவசர மற்றும் நில சட்டங்களின் கீழ் இலங்கைக்கு போதிய சட்ட அதிகாரம் உள்ளது. ஆனால் அரசுக்கு அதற்கான மனோதிடம் இல்லை.
மலையகத் தமிழர்கள் இனி தொழிலாளர் சமூகமாக மட்டும் அல்லாது, அரசியல், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமை எதிர்பார்ப்புகளைக் கொண்ட இலங்கையின் ஒரு இன தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சமீபத்திய சந்திப்பில், கூறியபடி மலையக மக்களின் காணி உள்ளிட்ட உரிமைகளை ஐரோப்பிய ஒன்றிய ஜிஎஸ்பி பிளஸ் வரி சலுகைக்கான நிபந்தனைகளில் ஒன்றாக வேண்டும். இதற்கு சுவிஸ் உதவிட வேண்டும். இதையே நாம் பிரான்ஸிய தூதுவரையும் நேரில் சந்தித்து கோரினோம் என்றார்





