சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மாதிரியானது பிரமிக்கத்தக்கது - எதிர்க்கட்சித்தலைவர்
பொருளாதார சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பை சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி மாதிரியானது சீனாவில் சமூக சமத்துவத்தையும் நீதியையும் ஊக்குவிப்பதுடன், அதன் மூலம் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் செழிப்பை அடைய முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 01-07-2026 அன்று விசேட செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச, அந்த வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லரசாக சீனா உருவெடுப்பதற்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்கள், நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பை சஜித் பிரேமதாச பாராட்டியுள்ளார்.
மேலும், சீனாவின் வளர்ச்சி அனுபவங்கள், குறிப்பாக அதன் சீர்திருத்தங்கள் மற்றும் அதனைச் செயற்படுத்துவதற்கான உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றிலிருந்து ஒரு நாடாக இலங்கை கற்றுக்கொள்வதற்கு பல பெறுமதிமிக்க பாடங்கள் உள்ளன என்றும் சஜித் கூறியுள்ளார்.
ஆசியாவில் அமைதி, சகவாழ்வு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்திய சஜித் பிரேமதாச, பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றத்தின் முக்கிய உந்துசக்திகளாக சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையில் தொடர்ச்சியான வலுவான உறவு ஏற்படும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நவீன பொருளாதார அணுகுமுறைக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளை எடுத்துரைத்த சஜித் பிரேமதாச, கட்சிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்கும் தனக்குள்ள அர்ப்பணிப்பை இங்கு மீண்டும் ஒரு முறை சஜித் உறுதிப்படுத்தினார்.





