முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டாரவுக்கு ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியல்
நேற்றைய தினம் பிற்பகல் 5.20 மணியளவில் சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தில் இடம்பெற்ற மோசடித் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தில் இடம்பெற்ற மோசடித் தொடர்பில் மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த அதிகாரிகள் குழுவினர், நேற்றைய தினம் (18) காலை கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்துச் சந்தேகநபரைக் கைது செய்தனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபரிடமிருந்து நீண்ட நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் பிற்பகல் 5.20 மணியளவில் சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில், சந்தேகநபர் 2022 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய அதேகாலப்பகுதியில் விசேட கருத்திட்ட பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இரு சம்பளக் கொடுப்பனவைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதற்கமைய சந்தேகநபருக்கு விசேட கருத்திட்ட பணிப்பாளராகக் கடமையாற்றியமைக்கு 40 இலட்சத்து 20 ஆயிரத்து 864 ரூபாவும், ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளராக இருந்தமைக்கு 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாவும் சம்பளக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு மேற்படி விசேட கருத்திட்ட பிரிவில் சந்தேகநபர் உட்பட 135 பேர் பணிபுரிந்துள்ளனர். அவர்களின் சம்பளக் கொடுப்பனவுக்காக மாத்திரம் ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் ஊடாக 20 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பிரிவு பொதுமக்கள் சேவைக்காக அன்றி பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மாத்திரம் முன்னெடுத்துள்ளது. ஆகையால் இது பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படுவதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரிகள் மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.
இதன்போது சந்தேகநபர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க, எனது சேவைபெறுநர் வெறுப்பின் காரணமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய போது, குறித்தபதவிக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதை அவர் எழுத்துப்பூர்வமாக நிராகரித்தார்.
அந்தப் பணம் கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலேயே வைப்பிலிடப்பட்டுள்ளது. அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் விசேட கருத்திட்டப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். அதற்குரிய சம்பளக் கொடுப்பனவுகளே சட்டப்பூர்வமான முறையில் எனது சேவைபெறுநருக்குக் கிடைத்துள்ளது. ஆகையால் எனது சேவைபெறுநரை பிணையில் விடுவிக்குமாறு மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான், அரச கணக்குகளிலிருந்து பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்குமாறும், சந்தேகநபருக்கு நியமனங்களை வழங்கிய அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.





