கபில சந்தசேன மரண விசாரணை: முக்கிய சாட்சிகள் பதிவு
மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த நீதிவான் விசாரணை விசாரணையின் போது, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி நீதிமன்றில் பல முக்கிய உண்மைகளை முன்வைத்தார்.
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்தசேனவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை, கொழும்பு குற்றப்பிரிவினரால் 19-05-2026 அன்று கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, கபில சந்தசேன தங்கியிருந்த இல்லத்தில் சிசிடிவி கமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை என கொழும்பு குற்றப்பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
மூன்றாவது நாளாக நடைபெற்ற இந்த நீதிவான் விசாரணை விசாரணையின் போது, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி நீதிமன்றில் பல முக்கிய உண்மைகளை முன்வைத்தார். கபில சந்தசேன மரணமடைந்த அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில், வாகனங்களை நிறுத்துவதற்காக கீழ் தளத்தில் இரண்டு வாகன தரிப்பிடங்கள் உள்ளதாகவும், அவற்றின் வழியாக வீட்டிற்குள் நுழைய முடியும் என்றாலும், தற்போதைய விசாரணைகளின்படி வெளிநபர் எவரும் அவ்வாறு வீட்டிற்குள் நுழைந்தமை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரணம் நிகழ்ந்த இடத்தில் பெயரிடப்படாத 11 மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அதிகாரி, அந்த மாத்திரைகளையும், மரணமடைந்தவரின் இரத்த மாதிரிகளையும் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பித்து அறிக்கை பெறுவதற்கான உத்தரவை வழங்குமாறு கோரினார். அத்துடன், சம்பவ இடத்தில் இருந்த டிவிஆர் இயந்திரத்தையும் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க அனுமதி கோரப்பட்டது.
இதன்போது நீதிவான், "மரணமடைந்தவரின் இல்லத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டதா?" என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த குற்றப்பிரிவு அதிகாரி, "மரணமடைந்த கபில சந்தசேனவின் வீட்டிலும் சிசிடிவி கேமராக்கள் இயங்கிய போதிலும், அவற்றில் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை" என்று தெரிவித்தார். இதையடுத்து, அந்த இரண்டு டிவிஆர் இயந்திரங்களையும் இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், சிசிடிவி கட்டமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த பொறியியலாளர் ஒருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து கேள்வி எழுப்பிய நீதிவான், இந்த விவகாரத்தில் கபில சந்தசேனவுக்கு பிணை வழங்குவதற்காக அவரது வீட்டிற்கு வந்த இரண்டு முக்கிய பிணையாளர்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டனவா? எனப் பொலிஸாரிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த அதிகாரி, அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது கடினமாக இருந்தது என்றார். , "பிரதான சாட்சியாளர்களான அவர்கள் வாக்குமூலம் வழங்க வரவில்லை என்றால், அவர்களை நீதிமன்றத்துக்கு கட்டாயம் அழைத்திருக்க வேண்டுமல்லவா? ஏனைய சாட்சிகளை விட அவர்கள்தானே முக்கியமானவர்கள்? சாட்சியங்களின் போது அவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளனவே?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பொலிஸார், அவர்களிடம் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்ய முடியவில்லை" என மீண்டுமொருமுறை கூறினர். "வாக்குமூலம் பெற முடியவில்லை என்பதற்காக அவர்களைச் சாட்சிக்கு அழைக்காமல் இருக்க முடியுமா? அவ்வாறாயின் விசாரணையை எவ்வாறு முன்னெடுப்பது?" என நீதிவான் கேள்வி எழுப்பினார். இதன்போது குறுக்கிட்ட குற்றப்பிரிவு அதிகாரி, அந்த இரண்டு பிணையாளர்களும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதிவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றால் வாக்குமூலம் பெறுவது இன்னும் இலகுவானதே. என்னிடம் ஒரு கட்டளையைப் பெற்று அதனை மிக எளிதாகச் செய்திருக்கலாமே என சுட்டிக்காட்டினார்.





