மீண்டுமொரு நிதி மோசடி நிகழாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - இலங்கை மத்திய வங்கி
'உதாரணமாக உங்கள் வங்கியின் கணக்கிலிருந்து பிறிதொரு கணக்குக்குப் பணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டால், வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்ப்பது உரிய வங்கியின் பொறுப்பாகும்.
அவுஸ்திரேலிய கடன்வழங்குனர் தரப்புக்கு திறைசேரியின் ஊடாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில் நிதியமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுபற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், நிதியமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள செயன்முறைகளை மீளாய்வு செய்துவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதவாறு பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்குத் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோன்று அரசாங்கத்தின் வங்கி என்ற ரீதியில் கணக்கு உரிமையாளர்களின் கொடுப்பனவு தொடர்பான அறிவுறுத்தல்களை சரிபார்த்தல் மற்றும் மாற்றுதல் என்பவற்றுக்கான நேரடிப் பொறுப்பு மத்திய வங்கிக்கு உரியதல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், கணக்கு விவரங்கள் மற்றும் கொடுப்பனவு முறைகள் உரியவாறு சரிபார்க்கப்பட்டதும், அந்தக் கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பதே மத்திய வங்கியின் வரையறுக்கப்பட்ட பணியாகும் எனத் தெளிவுபடுத்தினார்.
'உதாரணமாக உங்கள் வங்கியின் கணக்கிலிருந்து பிறிதொரு கணக்குக்குப் பணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டால், வங்கிக் கணக்கு எண்ணைச் சரிபார்ப்பது உரிய வங்கியின் பொறுப்பாகும். அதனை கணினி அங்கீகரித்தால், அக்கொடுப்பனவு மேற்கொள்ளப்படும். அதற்கு அப்பால் நீங்கள் வழங்கிய அறிவுத்தல்களை மாற்றும் உரிமை வங்கிக்கு இல்லை' என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும் வாடிக்கையாளர்களின் அறிவுத்தல்க்ளை மாற்றும் அதிகாரம் வங்கிகளுக்கு இல்லை எனவும், பணப்பரிமாற்றத்தின் பின்னரான உறுதிப்படுத்தல் பொதுவாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனத்தினாலேயே கையாளப்படும் எனவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.
அத்தோடு மோசடி செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் தொடர்பான அறிக்கைகள் அவுஸ்திரேலியாவில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.





