மலையக மக்களின், காணி உரிமையை உறுதி செய்க: மனோகணேசன்
இந்த அடிப்படையில், பெருந்தோட்டங்களில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்விட காணி, பாதுகாப்பான மலை அடிவார சமவெளிகளில், சாலை ஓரங்களில் வழங்க பட வேண்டும்.
இனிமேல் பாதுகாப்பான இடங்களில் மட்டுமே மக்கள் குடியமர்த்த படுவார்களென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உரையில் தெரிவித்தார். இதை நான் வரவேற்கிறேன். இந்த கொள்கையின் அடிப்படையில், பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு, மலையக அடிவார சமவெளிகளில், சாலை ஓரங்களில் வீடு கட்டி வாழ காணி வழங்கி, அவர்களை மண் சரிவு அபாயங்களில் இருந்து பாதுகாப்பாக வாழ வழி செய்யுங்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நேரடியாகவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி தனது உரையில் மேலும் ஆளும், எதிர் கட்சிகள் அடங்கிய தேசிய சபை என்பது பற்றியும் குறிப்பிட்டார். இந்த சபையின் அதிகார வரம்பு, கட்டமைப்பு இயந்திரம் பற்றி அவர் இனிமேல் தான் விபரமாக கூற வேண்டும். இத்தகைய ஒரு சபையில் சேர்ந்து செயற்படுவது பற்றியும் நாம் சாதகமாக பரிசீலிப்போம்.
நாம் பிரதிநிதித்துவம் செய்யும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களை மென்மேலும் தேசிய நீரோட்டத்துக்கு உள்ளே கொண்டு வர வேண்டும் என்பது எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதான கோட்பாடாகும்.
இந்த அடிப்படையில், பெருந்தோட்டங்களில் வாழும் சுமார் இரண்டரை இலட்சம் குடும்பங்களுக்கு வாழ்விட காணி, பாதுகாப்பான மலை அடிவார சமவெளிகளில், சாலை ஓரங்களில் வழங்க பட வேண்டும்.
ஒவ்வொரு அனர்த்தங்களின் போதும், நமது மக்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு போவது, பின் பழைய இடங்களுக்கு திரும்புவது, என்ற இந்த சிந்துபாத் தொடர்கதை முடிவுக்கு வர வேண்டும். உத்தேச தேசிய சபையில், எமது இந்த கோட்பாட்டை மேலும் வலியுறுத்த வழி ஏற்படுமாக இருந்தால், நான் மகிழ்ச்சி அடைவேன் என்றுள்ளது.





