சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகையினால் அழுத்தத்துக்கு முகங்கொடுக்கும் அபாயத்தில் இலங்கை - சர்வதேச நாணய நிதியம்
மக்கள் தொகை மாற்றமானது நாடு முகங்கொடுக்கக்கூடிய நீண்டகால சவால்களில் ஒன்றாக உருவெடுத்துவருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
மிக வேகமாக வயதடைந்துவரும் மக்கள் சனத்தொகைக்கு மத்தியில் இல்ஙகை அதன் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், தொழிலாளர்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
'ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைத்தல்: வாய்ப்புகளும் சவால்களும்' எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள பகுப்பாய்வு அறிக்கையிலேயே சர்வதேச நாணய நிதியம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரமானது மக்கள் தொகை சார்ந்த நலன்களுக்கு அப்பால், தற்போது சுருங்கிவரும் உழைக்கும் மக்கள் தொகை மற்றும் அதிகரித்துவரும் வயதடைந்தோர் சனத்தொகை என்பவற்றுடன் தொடர்புடைய வலுவான அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துவரும் ஆசியப் பிராந்தியப் பொருளாதாரங்களில் ஒன்றாகும் எனவும் சர்வதேச நாணய நிதியம் வகைப்படுத்தியுள்ளது.
அதேபோன்று தொழிலாளர் விநியோகம், உற்பத்தித்திறன், ஓய்வூதியம், சுகாதாரச் செலவினங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மக்கள் தொகை மாற்றமானது நாடு முகங்கொடுக்கக்கூடிய நீண்டகால சவால்களில் ஒன்றாக உருவெடுத்துவருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
மேலும் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி என்பது பிரதானமாக தொழிற்படை விரிவாக்கத்தை மாத்திரம் சார்ந்திருக்க முடியாது என்றும், மாறாக அதிக உற்பத்தித்திறன், தொழில்நுட்பப் பிரயோகம் மற்றும் மனித மூலதனத்தின் செயற்திறன்மிக்க பயன்பாடு என்பவற்றிலும் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்றும் நாணய நிதியத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





