கறுப்பு ஆடை அணிவது நாட்டினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை இருளாக்கும் செயல்: தொழில் பிரதி அமைச்சர்
நிகர சம்பள அதிகரிப்பைக் கணக்கிடும்போது 7,500 ரூபாவைக் கழிக்க வேண்டும்.
கறுப்பு ஆடை அணிந்து முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கையானது நாட்டினதும், பிள்ளைகளினதும் எதிர்காலத்தை இருளாக்குவதற்கு ஆதரவளிக்கும் செயலாகும். தொழிற்சங்க இயக்கத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றஞ்சாட்டினார்.
தொழில் அமைச்சில் 23-11-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் அவர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, கறுப்புப் பட்டி அணிதல் மற்றும் கறுப்பு ஆடை அணிதல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், பாடசாலை கட்டமைப்பில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ஆடை அணியும் நடவடிக்கை முழுமையான தோல்வியடைந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சிலர் மாத்திரமே கறுப்பு ஆடைகளை அணிந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
எவ்வாறிருப்பினும், தொழிற்சங்க உரிமைகளுக்கு அமைவாகத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கின்றது என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். அதில் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் கிடையாது. ஆனால், நீங்கள் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளை எந்த வகையான அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கின்றீர்கள் என்பதையே நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் எமது நாட்டின் வரலாற்றில் இதுவரை இடம்பெற்றிராத அளவுக்கு அதிகூடிய அடிப்படைச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பல்வேறு தரப்பினரும் கணக்கீடுகளை முன்வைத்து இவ்வளவு அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது, அவ்வளவு அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு அரச ஊழியரும் தத்தமது சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்து, தமது அடிப்படைச் சம்பளம் எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்.
அதேவேளை, நிகர சம்பள அதிகரிப்பைக் கணக்கிடும்போது 7,500 ரூபாவைக் கழிக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முன்னர் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வந்த தொகை தற்போது சம்பளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பு எந்தவகையான பொருளாதாரச் சூழலில் வழங்கப்பட்டது என்பதையும் நாம் மீண்டும் திரும்பிப் பார்க்க வேண்டும். 2024ஆம் ஆண்டில் எமது நாடு வங்குரோத்து நிலையை எதிர்கொண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு பதிலாக, 2048ஆம் ஆண்டு வரையில் பொறுமையாக இருக்க வேண்டும் என மக்களிடம் கூறிய தலைவர்கள் ஆட்சியில் இருந்த நாடாகவே இலங்கை காணப்பட்டது.





