சபாநாயகர்,எதிர்க்கட்சித் தலைவர் கடும் தர்க்கம்
ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பற்றி விவாதிப்பதற்கு எமக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டார்.
உங்களின் விருப்பத்துக்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரை நோக்கி குறிப்பிட்ட நிலையில், உங்களின் விருப்பத்துக்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி குறிப்பிட இருவருக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது.
பாராளுமன்றத்தில் 21-11-2026 அன்று நடைபெற்ற அமர்வின்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா,
'பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துமாறு வலியுறுத்தி யோசனை ஒன்றை முன்வைத்தேன்.
பிறிதொரு நாட்டின் நீதிமன்ற தீர்ப்புடன் தொடர்புடைய விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று குறிப்பிட்டுக் கொண்டு சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தும் யோசனையை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. கடந்த காலங்களில் பிறிதொரு நாட்டுடன் தொடர்புடைய விடயங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயம் குறித்து பாராளுமன்ற சிறப்புரிமை மீறல் குழுவுக்கு அறிவுறுத்துமாறு' வலியுறுத்தினார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பற்றி விவாதிப்பதற்கு எமக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிட்டார்.
இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன 'இது ஒழுங்குப்பிரச்சினை அல்ல' என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரை நோக்கி 'இதோ பாருங்கள் உங்களின் விருப்பத்துக்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்று உரத்த குரலில் குறிப்பிட்டார்.'
சபைக்கு தலைமைத் தாங்கிய சபாநாயகர் 'எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே உங்களின் விருப்பத்துக்கு அமையவும் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்பட முடியும்.ஆகவே நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளதை முதலில் படியுங்கள். ஒழுங்குப்பிரச்சினையுடன் தொடர்புப்படாத விடயம் பற்றி பேசுவதற்கு அனுமதி கோரும் போது எவ்வாறு அதற்கு அனுமதியளிப்பது' என்று குறிப்பிட்டார்.





