பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேர் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியல்
பொலிஸார் தலையிட்டு, பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்தனர்.
அனுராதபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஏழு பேரையும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புனித பூமியினுள் தமது எதிர்ப்பினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று, சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் விடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் , அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த 7 சந்தேக நபர்களையும் மனநலப் பரிசோதனைகளுக்கும், அவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான பரிசோதனைகளுக்கும் உட்படுத்துமாறும் நீதிவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.
ருவன்வெலி சாயவுக்கு அருகில் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதம், உத்தேச அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும், கலபொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்தல் உள்ளிட்ட விடயங்களை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
12-11-2026 அன்று ராஜங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைத்தந்திருந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது.
பின்னர் பொலிஸார் தலையிட்டு, பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்தனர். சந்தேகநபர்கள் அனுராதபுர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, நீதிவான் அவர்களை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டதோடு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.





