கனடாவின் மிகப்பெரிய ஹீலியம் சுத்திகரிப்பு நிலையம் தென்மேற்கு சஸ்காட்செவானில் திறப்பு
2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஹீலியம் விநியோகத்தில் சஸ்காட்செவான் மாகாணத்தின் பங்கை 10 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு என்று அவர் கூறினார்.
கனடாவின் மிகப்பெரிய ஹீலியம் சுத்திகரிப்பு நிலையத்தை நார்த் அமெரிக்கன் ஹீலியம் நிறுவனம், தென்மேற்கு சஸ்காட்செவான் பகுதியில் திறந்துள்ளது.
ஸ்டீவர்ட் வேலி அருகே அமைந்துள்ள இந்தப் புதிய நிலையம், ஆண்டுக்கு சுமார் 7.3 கோடி கன அடி ஹீலியத்தை உற்பத்தி செய்யும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சஸ்காட்செவான் மாகாணத்தின் ஆண்டு ஹீலியம் உற்பத்தி 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று அந்த மாகாணத்தின் எரிசக்தி மற்றும் வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சஸ்காட்செவானின் வளத்துறையைப் பற்றிப் பேசும்போது, எண்ணெய், பொட்டாஷ், யுரேனியம் ஆகியவற்றைப் பற்றி நாம் அடிக்கடி பேசுகிறோம். இந்த மாகாணம் வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய வளமாக ஹீலியம் திகழ்கிறது. இன்று திறக்கப்பட்டுள்ள இந்த நிலையம், வலிமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வளப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான மற்றொரு படியாகும்” என்று எரிசக்தி மற்றும் வளத்துறை அமைச்சர் கிறிஸ் பியூட்ரி தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய ஹீலியம் விநியோகத்தில் சஸ்காட்செவான் மாகாணத்தின் பங்கை 10 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு என்று அவர் கூறினார்.
மருத்துவம், பாதுகாப்புத்துறை, விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பட்ட உற்பத்தித் தொழில்கள் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு தொழில்துறைச் செயல்பாடுகளுக்கு ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது.





