இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை - சாணக்கியன் எம்.பி.
ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரதானமாக பேசப்படும்.
சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வெளிவிவகாரத்துறை அமைச்சர் சர்வதேச அரங்குக்கு சென்று 'உள்ளக பொறிமுறை ஊடாக தீர்வு' என்று குறிப்பிடுகிறார்.ஆனால் இலங்கையில் உள்ளக பொறிமுறைக்கான முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பும் உள்ளக பொறிமுறையை ஏற்கவில்லை.இதன் தாக்கத்தை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-11-2026 அன்று நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பென்ஸ் சோல் என்பவர் குறிப்பிட்ட கருத்துக்கள் மற்றும் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் நீதியமைச்சர் பலமுறை குறிப்பிடுகிறார். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து பென்ஸ் சோல் இம்மாதம் 09 ஆம் திகதி பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.ஆகவே அது குறித்து கவனம் செலுத்துமாறு நீதியமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஜி.எஸ்.பி வரிச்சலுகை விவகாரத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பிரதானமாக பேசப்படும்.ஆகவே இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகாரத்துறை அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து முன்வைக்கப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்.





